‘உறுமய’ வேலைத்திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல – சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன

  • இரண்டு வருடங்களில் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட புரட்சிகரமான வேலைத்திட்டம் ‘உறுமய’ வேலைத்திட்டம் ஆகும் – காணி ஆணையாளர் நாயகம்.
  • வடக்கு/கிழக்கில் 70% காணி உரிமை தீர்வும், ஏனைய மாகாணங்களில் 99% தீர்வும் வழங்கப்பட்டுள்ளது – காணி நிர்ணயத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்.
  • அனைத்து காணிகளும் அடையாளம் காணப்பட்டு டிஜிட்டல் தரவு கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர்.
  • பிரதேச செயலக மட்டத்தில் காணி உபயோகத் திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன – காணி உபயோகக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்.
  • சம்பளம் பெறுவதால் கடமைக்கு சமூகமளிக்காமல் இருக்க வேண்டாம் என்று அரசாங்க நில அளவையாளர்கள் சங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்- சர்வேயர் ஜெனரல்.

முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரம் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல எனவும் எனவே தேர்தல் காலங்களிலும் இத்திட்டம் தொடர்ந்தும் செயற்படும் எனவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்தார்.

‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் பணிகளை இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோத சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன,

‘’இந்த இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கை மக்களுக்கான மிக முக்கியமான வேலைத்திட்டமான ‘உறுமய’ காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் எமது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம். இதுவரை 100,000இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

‘உறுமய’ வேலைத்திட்டம் என்பது பல கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும் ஒரு தொடர்ச்சியான வேலைத்திட்டமாகும். அதன் முதற்கட்டமே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபோதும் அரசியல் வேலைத்திட்டம் அல்ல. தேர்தல் காலங்களில் கூட இந்த காணி உறுதிகள் வழங்கப்படும். ஆனால் அதற்கு அரசியல் தலையீடு இருக்காது.

பிரதேச செயலாளரின் ஊடாக வழங்கப்படும் ஏனைய சேவைகளைப் போன்று இந்த காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படுகின்றன. எனவே, தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது, இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு ஒரு காரணமாக இருக்காது. இந்த திட்டம் எந்த தேர்தல் சட்டத்தையும் மீறாது.

ஏனெனில், இந்த காணி உறுதிகள் தேர்தல் காலத்தில் பொது மேடைகளிலோ அல்லது அரசியல்வாதிகளின் பங்களிப்புடனோ வழங்கப்படுவதில்லை. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் செயல்முறையை மேலும் திறம்படச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க,

இரண்டு வருடங்களுக்குள் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்ட புரட்சிகரமான வேலைத்திட்டம் ‘உறுமய’ வேலைத்திட்டம் ஆகும். இந்த உறுமய திட்டத்தின் மூலம் முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதால் இலங்கை மக்கள் தங்கள் காணிகளை சிக்கலின்றி அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது புதிய உறுதிகள் அல்ல. இதுவரை காணிக்காக வழங்கப்பட்ட ஜயபூமி, ஸ்வர்ணபூமி அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக காணி உறுதிப் பத்திரங்கள் மக்களுக்கு வழங்கப்படுவதுதான் இதன்போது இடம்பெறுகிறது. இதற்காக சுமார் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் சுமார் 20,000

முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் 50,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

இதுதவிர, சிறப்பு நிலச் சட்டத்தின் திருத்தம் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரச நிலங்களை நீண்டகால குத்தகைக்கு வழங்கும் முறையைத் திருத்துதல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சர்வேயர் ஜெனரல் டபிள்யூ. சுதத் எல். சி. பெரேரா,

‘’அதிவேக நெடுஞ்சாலைளுக்கான அளவைப் பணிகள், ‘உறுமய’ வேலைத் திட்டம் தொடர்பான வரி வரைபடங்கள் தயாரித்தல், பிம் சவிய திட்டம் தொடர்பான கெடஸ்ட்ரல் வரைபடங்கள் தயாரித்தல் (Cadastral maps), புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் ஏனைய மின்சார திட்டங்களுக்கான அளவைப் பணிகள் என பல பணிகளை இந்த இரண்டு வருடங்களில் நில அளவைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில், பொதுமக்களுக்கும் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கு இணையச் சேவை மூலம் நில வரைபடத் தகவலை (LAS / LISS திட்டம்) வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நில அளவையாளர் சங்கம் மார்ச் மாத இறுதியில் இருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திணைக்களம் மற்றும் அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கோரிக்கைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம்.

அவர்கள் பல மாதங்களாக சம்பளம் பெற்றுக்கொண்டு, பணிக்கு சமூகமளிக்காமல் உள்ளனர். நேற்று (24) எமது அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்திவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு அவர்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், இந்த நேரத்தில், வேலைநிறுத்தத்தை நிறுத்தி, பணிக்குச் சென்று, கடமைகளுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ எனத் தெரிவித்தார்.

காணி நிர்ணய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திமா சிகேரா,

‘’பொது மக்களின் காணி உரிமைகளை பிரச்சினைகள் அற்ற வகையில் உறுதி செய்வதே காணி நிர்ணய திணைக்களத்தின் பிரதான செயற்பாடாகும். அதன்படி காணி தொடர்பிலான பிரச்சினைகளை விசாரணை செய்து பிரச்சினையின்றி காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ‘பிம் சவிய’ சான்றிதழ், வழங்கும் நிகழ்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி, காணி தீர்வு கட்டளைச் சட்டத்தின் கீழ், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 70% சதவீத காணிகளையும் ஏனைய மாகாணங்களில் 99% காணிகளின் உரிமையையும் பிரச்சினை இன்றி வழங்க முடிந்துள்ளது. மேலும், ‘பிம் சவிய’ திட்டத்தின் ஊடாக, தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, இதுவரை 1 – 2 தர காணிகளுக்கான 1,000,000 உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.’’ எனத் தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த,

‘’கடந்த இரண்டு ஆண்டுகளில், காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நாட்டின் அனைத்து காணிகளையும் அடையாளம் கண்டு அவற்றை டிஜிட்டல் தரவுக் கட்டமைப்பில் இணைத்துள்ளது. மேலும், புதுப்பிக்கப்பட்ட நிலப் பதிவேட்டின் அடிப்படையில் தற்போதுள்ள காணி உறுதிகளை தயாரிப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்குமான கட்டமைப்பொன்று நிறுவப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக வழக்குகளை சமரசம் செய்துகொள்வதற்கும், முறையான அனுமதியின்றி காணிகளை வைத்திருப்போருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்குமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டடு வருகின்றன.

இதேவேளை, காணியின் தற்போதைய பெறுமதியை மதிப்பீடு செய்து சுற்றறிக்கை வௌியிடுதல் வரி வருமானம் சேகரிக்கும் பணிகளை திறம்பட செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை கடந்த இரு வருடங்களில் வினைத்திறனுன் செய்திருக்கிறோம்.’’ என்று தெரிவித்தார்.

காணி பயன்பாடு மற்றும் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தேவிகா குணவர்தன,

‘’இலங்கையின் காணி பயன்பாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் தேசிய பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதே காணி பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் முக்கியப் பணியாகும்.

இதன்படி, கடந்த இரண்டு வருடங்களில் தேசிய காணி பயன்பாட்டு தொடர்பான மதிப்பீடு பூர்த்தி செய்யப்பட்டு பிரதேச செயலக மட்டத்தில் தரவு சேகரித்தல் மற்றும் காணி பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல் போன்ற செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும், கிராமப்புற மற்றும் நீர்ப் போஷாக்கு பகுதிகள் மட்டத்தில் நில பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து, மண் மற்றும் நீர் பாதுகாப்பின் மூலம் பயன்படுத்தப்படாத விவசாய நிலங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். காணி பயன்பாடு தொடர்பிலான அறிக்கை வழங்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்தியுள்ள அதேநேரம், பாடசாலை மாணவர்களையும் சமூக குழுக்களையும் தௌிவூட்டம் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.