மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்களன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இதனைப் பாரபட்சமான மற்றும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பட்ஜெட் என்று விமர்சித்த இந்தியா கூட்டணி கட்சிகள், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு மட்டும் மொத்தமா ரூ. 40,000 கோடிக்கு மேல் சிறப்பு நிதியும், பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதற்கும் ஒருபடி மேலாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர், ஜூலை 27-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், தங்களின் குரலைப் பதிவு செய்வதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
நாளை தொடங்கும் இந்தக் கூட்டத்துக்காக டெல்லிக்கு இன்று புறப்படுகையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தின் மீது காட்டப்படும் அரசியல் பாகுபாட்டை நிதி ஆயோக் கூட்டத்தில் எதிர்ப்பேன். பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் அணுகுமுறை மேற்கு வங்கத்தைப் பிளவுபடுத்தும் வகையில் இருக்கிறது.
அவர்கள் பொருளாதார முற்றுகையுடன், புவியியல் தடையையும் விதிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கத்தைப் பிரிக்க வேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதோடு, எங்கள் குரலைப் பதிவுசெய்ய விரும்புகிறோம். அதற்காக, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பேன். தேவைப்பட்டால் கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்வேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88