இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 21 முதல் 25 வரை சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் எட்டாவது சீன-தெற்காசிய கண்காட்சியில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரியங்கர ஜயரத்ன, கௌரவ எம்.எஸ்.தௌபீக் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றிய சபாநாயகர் அபேவர்தன குறிப்பிடுகையில், சீன-தெற்காசிய கண்காட்சி 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் சிறப்பாகப் பங்காற்றியதாகச் சுட்டிக்காட்டினார். இக்கண்காட்சி இலங்கைக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெற்றுத்தந்ததுடன், சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவியதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் உபசரிப்புக்கும் சீன வர்த்தக அமைச்சுக்கும் யுனான் மாகாண அரசாங்கத்திற்கும் சபாநாயகர் அபேவர்தன நன்றி தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற 5 ஆவது சீன-தெற்காசிய ஒத்துழைப்பு ஒன்றியத்தின் ஆரம்ப நிகழ்விலும் உரையாற்றினார். இங்கு, “பிராந்திய அபிவிருத்திக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குதல்”, எனும் ஒன்றியத்தின் தொனிப்பொருளுக்கு அமைய கௌரவ சபாநாயகர் உலகளாவிய அபிவிருத்தி சவால்களுக்கான கூட்டுத் தீர்வுகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
யுன்னான் மாகாணக் குழுவின் செயலாளரும், யுன்னான் மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவருமான வாங் நிங் மற்றும் 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் டிங் சோங்லி ஆகியோருடனும் தூதுக் குழுவினர் உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தினர்.
சீன மக்கள் குடியரசின் 75வது ஆண்டு நிறைவு மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் தொடர்பான 70வது ஆண்டு நிறைவு விழாவிற்கும் சபாநாயகர் வாழ்த்துத் தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு, கலாசார பரிமாற்றம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய துறைகளில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான 67 வருட சிறந்த இராஜதந்திர உறவுகளை விருத்தி செய்வதன் மூலம் ‘ஒரே சீனா’ கொள்கைக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், சீனாவின் ‘ஒரு பெல்ட் ஒரு பாதை’ திட்டத்தின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சபாநாயகரின் சீனாவுக்கான விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (China Global Television Network – CGTN) உடனான நேர்காணல் மற்றும் யுன்னான் மாகாணத்தில் உள்ள ஒரு சூரிய வலு மையம், உயர் தொழில்நுட்ப பசுமை தொழில் கண்காட்சி மற்றும் தொழிற்கல்வி போக்குவரத்து கல்லூரிக்கான விஜயமும் உள்ளடங்குகின்றன.