புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அம்மாநிலம் தனது தலைநகரை கட்டமைக்கவும், பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசின் ஆதரவு தேவை.
ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் படி, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய தலைநகர் அமராவதி, போலவரம் சொட்டுநீர் பாசன திட்டம் ஆகியவற்றில் நாங்கள் ஆதரவளிப்போம்.
ஒவ்வொரு பட்ஜெட்டும் அதன் உள்ளடக்கங்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் பட்ஜெட்டின் மொழியை வடிவமைப்பதும் ஒரு பெரும் சவால். பட்ஜெட் எளிமையாக இருக்க வேண்டும், சொல்வதை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மொழி எளிமையாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் ஆசை. பட்ஜெட்டில் எதையும் மறைக்காமல், அனைத்தையும் சொல்ல வேண்டும் என்பது ஆரம்பத்திலிருந்தே அவர் தெளிவாகக் கூறி வந்த மற்றொரு அம்சம்” இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 23 அன்று 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஆந்திரா மற்றும் பிஹாருக்கு சிறப்பு திட்டங்களை அவர் அறிவித்தார்.