"என் புது BMW கார்ல குழந்தைகளைக் கூட்டிட்டுப் போனதுக்கான காரணம் இதுதான்!" – KPY தங்கதுரை நெகிழ்ச்சி

`கலக்கப்போவது யாரு?’ டிவி புகழ் மற்றும் சினிமா நடிகருமான தங்கதுரை தனது பிஎம்டபிள்யூ காரில் ஏழைக்குழந்தைகளை ஏற்றிச்சென்று அவர்களது விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹரீஷ் கல்யாணின் ‘டீசல்’, பிரபுதேவாவின் ‘ஜல்சா’, மிர்ச்சி சிவாவுடன் ‘சலூன்’, பாபி சிம்ஹாவுடன் ‘தடை உடை’ ஜெய்யுடன் ஒரு பெயரிடாதப்படம், ‘ஹிப்ஹாப்’ ஆதி, அர்ஜுன் படம் என டஜன் கணக்கில் பிஸியாக நடித்துவரும் தங்கதுரையின் இந்தத் தங்கமான மனசுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், நாமும் பாராட்டுகளோடு அவரிடம் பேசினோம்.

தங்கதுரை

“என்னோட சின்ன வயசு ஏக்கங்களைத்தான், இப்போ இந்தக் குழந்தைகள் மூலமா நிறைவேற்றி இருக்கேன். எங்கூட பிறந்தவங்க மொத்தம் அஞ்சுப் பேர். அப்பா கூலித்தொழிலாளி. அவரோட ஒற்றை வருமானத்துலதான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே. வீட்ல டிவி கிடையாது. பைக்கும் கிடையாது. பக்கத்து வீட்லதான் பார்ப்போம். எங்கயாவது போறதுன்னாக்கூட லிஃப்ட் கேட்டுப்போவோம். அப்படியொரு வறுமையான சூழல். ஆனா, அந்தச் சூழலையே வைராக்கியமா எடுத்துகிட்டு எல்லோரும் நல்லா படிச்சோம்.

அம்மால்லாம் எங்கப் போனாலும் நடந்துதான் போவாங்க. நாங்க ஸ்கூல் காலேஜ்லாம் பஸ்ல போய்த்தான் படிச்சோம். பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா, அடுத்த பஸ் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிட்டிருப்போம். இல்லைன்னா நடந்தே போய்டுவோம். பைக்ல போறவங்களை ஏக்கமா பார்த்த காலமெல்லாம் உண்டு. அதுக்கப்புறம்தான், பார்ட் டைம் வேலைல்லாம் பார்த்து, ஷோ எல்லாம் பண்ணி பணம் சேர்த்துவெச்சு பைக் வாங்கினேன்.

சின்ன வயசுலருந்தே கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சதால ஏழைக் குழந்தைகளோட ஆசைகள், தேவைகள், வலி-வேதனை எல்லாமே தெரியும். அதனாலதான், புதுசா வாங்கின பிஎம்டபிள்யூ சன்ரூப் கார்ல குழந்தைங்களைக் கூப்பிட்டுப் போனேன். புது கார் வாங்கினதுமே சமூக ஆர்வலர் லோகநாயகி மேடம்கிட்டே என்னோட விருப்பத்தைச் சொன்னேன்.

தங்கதுரை

ஏற்கெனவே, லோகநாயகி மேடம் கேட்டு நிறைய குழந்தைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டியிருக்கேன். இப்போவும், ரெண்டு குழந்தைங்களை மூணு வருஷமா படிக்க வெச்சுட்டு வர்றேன். அந்தப் பழக்கத்துல கேட்டவுடனே, லோகநாயகி மேடம் வியாசர்பாடிக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. பிஎம்டபிள்யூ காரைப் பார்த்ததும் குழந்தைங்க செம்ம ஹேப்பி ஆகிட்டாங்க. கார்ல போறதே பெருங்கனவு, அதுவும், சன்ரூப் கார்ல போற சந்தோஷத்தை சொல்லவா வேணும்? கார்ல போய் நான் இறங்கினதும் குழந்தைங்க என்னை வந்து அப்படியே கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. அவங்களோட முகத்திலும் கண்களிலும் அப்படியொரு ஆனந்தம்!

கார்ல ஏறினதும் சன்ரூப்ல நின்னுக்கிட்டு பயங்கர சந்தோஷத்துல கத்த ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதான் இந்த விலையுர்ந்த கார் வாங்கினதுக்கான அர்த்தத்தை உணர்ந்தேன். இதுக்கு முன்னாடி, இப்படியொரு சந்தோஷம் 2015-ல முதன் முதலா ஸ்விப்ட் கார் வாங்கும்போது கிடைச்சது. அதுல எங்கம்மாவை உட்கார வெச்சு ஆசையா ஓட்டிக்காட்டினேன். இப்போ பிஎம்டபிள்யூ கார் வாங்கிட்டேன். உட்கார்ந்து பார்க்க அம்மா உயிரோட இல்ல. அது மட்டும்தான் பெரிய குறை. ஆனா, அந்தக் குறையும் இந்தக் குழந்தைகளை வெச்சு சென்னையை சுத்திக் காட்டினதுல போய்டுச்சு. ரொம்ப மனநிம்மதியா இருக்கு!

இப்போ, நிறைய படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். முடிஞ்சவரைக்கும் ஏழைக் குழந்தைங்களுக்கு உதவணும்; படிக்கவெக்கணும்ங்கிறதுதான் ஆசை. அவங்க முகத்துல ஆனந்தத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்” என்று உணர்வுபூர்வமாக பேசுபவர், வியாசர்பாடி ஏழைக்குழந்தைகளை தனது பிஎம்டபிள்யூ காரில் அழைத்துச் சென்றதோடு துணிக்கடைக்குச் சென்று அவர்களுக்கு விருப்பமான உடைகளையும் வாங்கித்தந்துள்ளார்.

தங்கதுரை

“ஒருநாள் முழுக்க அந்தக் குழந்தைங்களோடத்தான் இருந்தேன். மவுண்ட் ரோடுல இருக்கற ஒரு ஹோட்டலோட பிரியாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்லா டேஸ்ட்டா தரமா இருக்கும். எனக்குப் பிடிச்சதை குழந்தைங்களும் சாப்பிடணும்ங்கிறதுக்காக அங்க கூட்டிட்டுப் போய் வயிறார சாப்பிடவெச்சேன். அதுக்காக, முன்னாடியே டேபிள் எல்லாம் புக் பண்ணிட்டேன். குழந்தைங்க நல்லா சாப்ட்டாங்க. அதுக்கப்புறம், மெரினா பீச் கூட்டிட்டுப் போனேன். குழந்தைங்க மட்டுமில்லாம அவங்க அப்பா அம்மாக்களும் குஷியாகிட்டாங்க” என்கிறார் குழந்தைகளை மகிழ்வித்த குதூகலத்துடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.