புதுடெல்லி: கூகுள் மேப்ஸ் மற்றும் உள்நாட்டு ஓலா மேப்ஸ் ஆகிய இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளன. இதனால் இவைஇரண்டும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ஓலா மேப்ஸ்-ஐ இந்திய நிறுவனங்கள் ஓராண்டு காலத்துக்கு இலவசமாக பயன்படுத்தலாம் எனஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களில் கூகுள் மேப்ஸ் பயன்பாட்டுக்கான கட்டணம் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து 70% குறைக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் கூகுள் மேப்ஸ்-ல் புதிய அம்சங்களைச் சேர்க்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. நான்குசக்கர வாகன ஓட்டிகள் குறுகலான மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது.
இந்த வசதியில் தெருவின் அமைப்பு, சாலையின் அகலம், கட்டிடங்களுக்கு இடையேயான தூரம் போன்ற தகவல்களை அறியலாம். இது நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குறுகலான பாதைகளை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் குறுகிய ரோடுகள் வழியாக எளிதாக செல்லவும் இந்த வசதி வழிவகுக்கும்.
ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கோவை, இந்தூர், போபால், புவனேஸ்வர் மற்றும் குவஹாட்டி ஆகிய 8 நகரங்களில் இந்த புதிய அம்சங்கள் ஆன்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
மேலும் இந்தியாவில் 40 நகரங்களில் வாகன ஓட்டிகள் செல்லும் சாலைகளில் மேம்பாலங்கள் உள்ளதை முன்கூட்டியே தெரிவிக்கும் அம்சமும் சேர்க்கப்படவுள்ளது. மின்சார வாகனங்கள் பயன்படுத்துவோருக்கு எங்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன என்ற தகவல்களும் இடம் பெறவுள்ளன.
இந்தியாவில் 8,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுடன் இருந்து சார்ஜிங் ஸ்டேஷன் உள்ள இடங்கள் பற்றிய தகவலை பெற்று அதன் விவரங்கள் கூகுள் மேப்ஸ்-ல் இடம்பெறவுள்ளன.
இதுகுறித்து கூகுள் மேப்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாங்கள் மற்ற நிறுவனங்களுடனான போட்டியில் கவனம் செலுத்துவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை மேம்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.