கடந்த 5 ஆண்டுகளில் யானை – மனித மோதலில் 2,500+ பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் யானை – மனித மோதல்களில் 2,853 பேர் உயிரிழந்துள்ளனர்; அதிகபட்சமாக 2023-ம் ஆண்டில் மட்டும் 628 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தான் சிங் வியாழக்கிழமை கூறியதாவது: யானைகள் தாக்கி, கடந்த 2019-ம் ஆண்டு 587 பேரும், 2020-ம் ஆண்டு 417 பேரும், 2021-ம் ஆண்டு 557 பேரும், 2022-ம் ஆண்டு 610 பேரும், 2023-ம் ஆண்டில் 628 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த காலகட்டங்களில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 624 இறப்புகள் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் 474, மேற்கு வங்கத்தில் 436, அசாமில் 383, சத்தீஸ்கரில் 303, தமிழகத்தில் 256, கர்நாடகாவில் 160, கேரளாவில் 124 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.



வனவிலங்குகளின் வாழ்விடங்களை பாதுகாத்து நிர்வகிப்பது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை பொறுப்பாகும். வனவிலங்குகள், அவற்றின் வாழ்விடங்கள், வலசை பாதைகளை பாதுகாப்பது, விலங்கு மனித மோதல்களை நிவர்த்தி செய்தல், பிடிபட்ட யானைகளின் நலன்கள் போன்றவைகளுக்காக புலிகள் மற்றும் யானைகள் திட்டங்களின் கீழ் மத்திய அரசு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய சுற்றுச்சூழல்துறை, மனிதன் – வனவிலங்கு மோதல், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கை, மோதல் ஏற்படும் இடங்களை அடையாளம் காணுதல், நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைபிடிப்பது, பிரச்சினைகளுக்கு விரைவாக பதில் அளிக்கும் குழுக்களை உருவாக்குவது போன்றவகளுக்கான ஆலோசனைகளை வழங்கியது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம், பயிர்கள் சேதம் உள்ளிட்ட மனித – விலங்கு மோதல்களை கையாளுவது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கி இருந்தது.

காடுகளின் எல்லைப் புறங்களில் இருக்கும் பகுதிகளில் யானைகளுக்கு பிடிக்காத, மிளகாய், எலுமிச்சை புல், குஸ் புல் போன்ற பணப்பயிர்களை மரங்கள் மற்றும் புதர்களுக்கு இடையில் வேளாண் காடுகள் மாதிரி வளர்ப்பது போன்றவைகளை மத்திய அரசின் பரிந்துரை ஊக்குவிக்கிறது.

மாநில அரசின் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து, மாநிலங்களுக்கு இடையேயான 15 யானைகளின் வரம்புகளில் 150 யானை வழித்தடங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த யானை வழித்தடங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

யானைகள் மற்றும் பிற வனவிலக்குகள் மீது மின்சாரம் பாய்ச்சும் மின்வேலிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து டிஸ்காம் மற்றும் மின்பரிமாற்ற நிறுவனங்களுக்கு மத்திய மின் அமைச்சகம் கடந்த 2022, செப்டம்பரில் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

ரயில்களில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுப்பதற்காக ரயில்வே மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களுக்கு இடையே நிரந்தர ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.