- பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்க செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்டுவதற்கு பிரத்தியேக கண்காட்சி கூடம்
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் 106 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் X-Ban – 2024 கல்வி, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஜனாதிபதி ரணில் தலைமையில் அண்மையில் (24) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பசுமைப் பொருளாதாரம் மூலம் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல், சமூகப் பல்வகைமை ஊடாக ஒத்துழைப்பை விரிவு படுத்தல், தினசரி வாழ்வில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தல் ஆகிய தொனிப்பொருள்களில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.
அதற்கமைய, ‘பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்க செயற்பாடுகள்’ தொடர்பில் மாணவர்களை அறிவூட்டும் வகையில் பிரத்தியேக கண்காட்சி கூடம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டடத்தின் மாதிரி, செங்கோலின் மாதிரி, பாராளுமன்ற சபா மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ள விதம், சபாநாயகர் சபையில் அணியும் ஆடையின் மாதிரி, சபாநாயகர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பாராளுமண்டத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் இந்தக் கண்காட்சி கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, கல்வி ரீதியாக முக்கியமான இந்த கண்காட்சி கூடத்தைப் பார்வையிடுவதற்குப் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் வளப் பங்களிப்பில் வித்தியாலய மாணவர்கள் இந்தக் கண்காட்சி கூடத்தை நடத்துகின்றனர்.
வித்தியாலயத்தின் அதிபர் கசுன் குணரத்னவின் வழிகாட்டலில் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் குழு, மானார்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பங்களிப்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கல்வி, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஜூலை 28 ஆம் திகதி முதல் இடம்பெறும்.