காவல், தீயணைப்பு துறைகளின் சீர்மிகு செயல்பாட்டால் சட்டம் – ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதாக தமிழக அரசு பெருமிதம்

சென்னை: தமிழக காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்புத் துறைகளின் சீர்மிகு செயல்பாடுகளால் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையிலும் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம், மதுரை சித்திரைத் திருவிழா, திருச்செந்தூர் சூரசம்ஹாரம் என மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. தமிழகம் அமைதிமிகு மாநிலமாக இருப்பதால்தான், காவல் பணியாளர்களின் கரோனா கால சிறப்பு பணிகளைப் பாராட்டி, ரூ.58.50 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கினார்.



காவல்துறை – பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல் பணியாளர்கள் நலன் காக்கவும், அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையத்தை முதல்வர் அமைத்துள்ளார். புதிதாக ஆவடி, தாம்பம் காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்யவும், சட்டப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யவும், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு, ரூ.1.91 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள், கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்ளிட்ட 19 இடங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘அவள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவலர்களுக்காக ரூ.609.33 கோடி மதிப்பில், 2,882 காவல்துறை வாடகைக் குடியிருப்புகள் 42 காவல் நிலையங்கள், 14 இதர காவல் துறை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சிறைவாசிகளுக்கான நூலகங்கள் ரூ.2.80 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக இத்துறை பங்கேற்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகள் பயன்பாட்டுக்காக நன்கொடையாக சேகரிக்கப்பட்டன, இதில் 1,500 நூல்களை முதல்வரும் வழங்கியுள்ளார்.

ரூ.45.26 கோடி செலவில் 94 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறை ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

தீயணைப்புத் துறையினர் கடந்த 3 ஆண்டுகளில் 61,288 தீ விபத்து அழைப்புகளிலும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 42,224 மனித உயிர்களையும், ரூ.605.06 கோடி மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றியுள்ளனர்.

தீயணைப்பு பணியாளர்களுக்கு ரூ.55.60 கோடியில் பாதுகாப்பு உபகரணங்கள், ரூ.55.62 கோடியில் தலைக்கவசம் மற்றும் காலணியுடன் கூடிய தீ பாதுகாப்பு உடைகள், மூச்சு கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மீட்பு உடைகள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.86.83 கோடியில் நவீன வாகனங்கள் மற்றும் உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளன.

ரூ.92.40 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.69.43 கோடியில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு பணியாளர்களுக்கு ரூ.39.30 கோடி செலவில் மாநில பயிற்சிக் கழகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் தமிழகத்தின் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைகள் சிறப்பாக செயல்பட்டு, சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு அதி்ல் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.