ஃபிராங்க்ஃபர்ட்: ஜெர்மனி நாட்டின் மிக முக்கிய விமான நிலையமான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவை ரத்தானது. வியாழக்கிழமை அன்று அங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டது இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
ஐரோப்பாவில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு விமான போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இது காலநிலை மாற்றத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சொல்லி அங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
அதிகப்படியான எரிபொருள் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் விளைவு மற்றும் அதனால் காலநிலை மாற்றம் சார்ந்து எழும் அச்சுறுத்தலை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி சூழலியல் ஆர்வலர்கள் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தை வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு தடுப்புகளை மீறி அவர்கள் உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் அவர்களை தடுத்துள்ளனர். இதன் காரணமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு நிலைமை கட்டுக்குள் வந்ததும் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.
இதற்கு ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலைய நிர்வாகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வேலையைச் செய்த சூழலியல் ஆர்வலர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே போல பின்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அமைந்துள்ள விமான நிலையங்களிலும் சூழலியல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டுள்ளனர். லண்டனில் சூழலியல் ஆர்வலர்களின் போராட்டம் முன்கூட்டியே போலீஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என ஜெர்மன் நாட்டின் அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.