தமிழ்நாடு ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை உற்பத்தி செய்யக்கூடிய மையமாக உள்ளது. ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் சென்னையில் ஐபோன் ஆலை அமைத்து உற்பத்தி செய்து வருகின்றன. மேலும், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் மிகப்பெரிய ஆலையை அமைத்துள்ளது. சால்காம்ப் நிறுவனம் சென்னை அருகே ஆலை அமைத்து ஐபோன்களுக்கான சார்ஜர்களை உற்பத்தி செய்கிறது.
இதுவரையில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் போன்ற ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தன. ஐபோன் நிறுவனத்தின் மற்ற பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. இந்த நிலையில், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐபேட் (iPad) உற்பத்தியை தொடங்குவதற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபேட் உற்பத்தி தொடங்குவது தொடர்பாக ஏற்கெனவே ஃபாக்ஸ்கான் நிறுவனம் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டில் வியட்நாம் நாட்டுக்கு ஐபேட் உற்பத்தியை விரிவாக்கம் செய்துவிட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவிலும் ஐபேட் உற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமல்லாமல், மத்திய பட்ஜெட்டில் மொபைல் பாகங்கள் மீதான இறக்குமதி வரி 20 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபேட் உற்பத்தியை தொடங்குவதற்கு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.