சென்னை: தெற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 காவல் நிலையங்களுக்கு கேடயங்களை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்.
தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாடு, சேவை உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மாநில அளவிலும், மாநகர, மாவட்ட அளவிலும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் கேடயம் வழங்கப்படுகிறது.
அதன்படி, மாநில அளவிலான சிறந்த 3 காவல் நிலையங்களுக்கு கடந்த குடியரசு தின கொண்டாட்டத்தின்போது, கேடயங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதன் அடுத்தகட்டமாக, மண்டல வாரியாக சிறந்த 10 காவல் நிலையங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தெற்கு மண்டலத்தில் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட 10 சிறந்த காவல் நிலையங்களுக்கு கேடயங்களை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்.
தெற்கு மண்டலத்தில் உள்ள மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையம், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையம், திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலையம், ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையம் என 10 காவல் நிலையங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.