தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: “அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,” என்று திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு, “சீனாவில் இருந்து இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டு இருக்கிறதா? மற்ற பொருட்களை எவ்வளவு மதிப்புக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்? எந்த நாட்டிலிருந்தும் இதையெல்லாம் இறக்குமதி செய்யக்கூடாது என்று தடை செய்யப்பட்ட பொருட்கள் உண்டா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த பதில்: “சீனா மற்றும் தைவானில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யக் கூடாது என்று எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நம் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத்துக்கு எவையெல்லாம் தேவையோ, அதை இந்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள எந்தத் தடையும் இல்லை. கடந்த 2023-24 ம் நிதியாண்டில் சீனாவில் இருந்து மட்டும் 8.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறோம். இது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 15 சதவீதமாகும்.



எதையெல்லாம் இறக்குமதி செய்யலாம் என்று கேள்வி வரும்போது, கட்டுப்படுத்தப்பட்டவை, தடை செய்யப்பட்டவை என இரண்டு வகை இருக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை உரிய அதிகார அமைப்புகளிடம் இருந்து உத்தரவு அல்லது அனுமதி பெற்ற பின்பே இறக்குமதி செய்ய வேண்டும். தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பொருட்களை உலகின் எந்த நாடுகளில் இருந்தும் எந்தச் சூழலிலும் இறக்குமதி செய்ய முடியாது.

அந்த வகையில், பிரதானமாக நமது நாட்டின் தேசியக் கொடி இருக்கிறது. எந்த அளவானாலும், மூன்று மடங்கு நீளம், இரண்டு மடங்கு உயரம் அல்லது அகலம் கொண்டதாகவும், செவ்வக வடிவிலும் இருக்க வேண்டும், குறைந்தபட்ச அழகு ஒப்பனை செய்யப்பட்டதாக தேசியக் கொடி இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது.

வாடகைத் தாய் மற்றும் செயற்கை கருத்தரிப்பு தொடர்பான சட்டங்களின்படி கருமுட்டை மற்றும் இனப்பெருக்க செல்களை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. எலெக்ட்ரானிக் சிகரெட் உட்பட அதேபோன்று செயற்கை புகையை உண்டாக்கும் எந்த சாதனத்தையும் இறக்குமதி செய்ய முடியாது. அதேபோல, ஜன்னலிலோ மேற் கூரையிலோ பொருத்துவது உட்பட எந்த மாதிரியான குளிர்சாதன இயந்திரங்களையும் இறக்குமதி செய்ய முழுமையான தடை இருக்கிறது. ஆளில்லாத விமானங்களையும் எந்த நாட்டிலிருந்தும் எவரும் இறக்குமதி செய்ய முடியாது.

ஆனால், கால மாற்றத்துக்கேற்பவும், நாடுகளுக்கிடையே பரஸ்பர வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல் அவ்வப்போது திருத்தப்பட்டு எளிதில் சில பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அவ்வப்போது மாற்றங்களைச் செய்கிறது. அந்த வகையில் கடந்த ஐந்தாண்டுகளில், பாமாயில் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பொருட்கள், வெள்ளி போன்றவற்றை எளிதாக இறக்குமதி செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது,” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.