நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடிக்கு முதல்வர் பினரயி விஜயன் கடிதம் எழுதியதாகவும், அதில், தன்னால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்றும், தனக்குப் பதிலாக மாநில நிதியமைச்சர் கே.பி.பாலகோபால் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் பினரயி விஜயன் கலந்து கொள்ளாததற்கு காரணம் தெரியவில்லை.

முன்னதாக, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் என தெரிவித்திருந்தார். “மேற்கு வங்கத்தின் மீது காட்டப்படும் அரசியல் பாகுபாட்டுக்கு எதிராக நிதி ஆயோக் கூட்டத்தில் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன்.



பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அந்தக் கட்சியின் தலைவர்களின் அணுகுமுறை, வங்கத்தை பிரிக்க நினைக்கும் வகையில் உள்ளது. பொருளாதார முற்றுகையுடன், புவியியல் தடையையும் விதிக்க விரும்புகிறார்கள். ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் வங்கத்தை பிரிக்க பாஜகவின் பல்வேறு தலைவர்கள் பல்வேறு அறிக்கைகளை விடுகிறார்கள். நாங்கள் அதனை கண்டிக்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் நாங்கள் எங்கள் குரலை பதிவு செய்ய விரும்புகிறோம். எனவே, நான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்” என அவர் கூறி இருந்தார்.

அதேநேரத்தில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுக எடுத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முதலாக சென்னையில் புறக்கணிப்பு முடிவை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என காங்கிரஸ் அறிவித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.