வடமாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நலிவுற்றவர்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரத்தியேக வேலைத்திட்டங்கள் வடமாகாண சபையின் பல்வேறு நிறுவனங்களினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அம்மையார் தெரிவித்தார்.
வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
இதற்கான ஒரு நடவடிக்கையாக, விசேடமாக மாகாண சபையினூடாக இவ்வருடம் உள்ளாசத்துறைக்கு 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடானது பிரதேச சபைகளினூடாக மாகாணத்தில் காணப்படுகின்ற பின் தங்கிய பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக பின் தங்கிய குடும்பங்களுக்கும், அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கின்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
அத்துடன், நெடுந்தீவு பிரதேசத்தில் காணப்படுகின்ற ‘ர்ழஅந ளுவயல’ அதாவது, வீடுகளில் உள்ளாசப்பயணிகளை தங்க வைத்துள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவளிக்கின்ற செயற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பிரதேச சபைகளினூடாக பாரம்பரிய உணவுகளை செய்து விற்பனை செய்கின்ற உணவகங்களை அமைத்துள்ளோம். இதில் அநேகமான விதவைகள் ஈடுபட்டடுள்ளனர். இதனூடாக அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்கின்றோம்.
மேலும், விவசாய அபிவிருத்தித் திட்டங்கள், கால்நடைகளை வழங்கும் திட்டங்கள், உணவு தயாரிக்கின்ற செயற்பாடுகள், போன்ற பல்வேறு செயற்பாடுகளில் விதவைப் பெண்களையும், நலிவுற்றவர்களையும் ஈடுபடுத்துவதற்கான செயற்பாடுகளை எமது திணைக்களங்களினூடாக நாம் மாகாணம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.