விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டியில் புதிய நீதிமன்றங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று மாலை திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றமும், வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தொடக்க விழா அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயகுமார் வரவற்றார். சென்னை உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி கிருஷ்ணகுமார் தொடக்கவுரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தலைமை வகித்தார். வத்திராயிருப்பு, காரியாபட்டி, ராஜபாளையம் நீதிமன்றங்களை காணொளி காட்சி மூலம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா, புகழேந்தி, ராமகிருஷ்ணன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜோபு ராம்குமார். ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கதிரேசன், ராஜபாளையம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக, விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரீதா நன்றி கூறினார்.