சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரஜினி பாண்டியன் என்பவரது மகள் ஜகதாவின் இரண்டாமாண்டு கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தி அவரது மேற்படிப்புக்கு உதவியுள்ளது ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் ரஜினி ரசிகர்கள் என்றில்லாமல் பொதுமக்கள் பலருக்கும் சத்தமில்லாமல் கல்வி உதவி வழங்கப்பட்டு வருவதாகச் சொல்கின்றனர், ரஜினி ரசிகர்கள்.
ஜகதாவின் கல்விக் கட்டணம் முழுவதும் ஒரே தவணையில் கல்லூரியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து விருகம்பாக்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் சாதிக் பாட்ஷா நம்மிடம் பேசினார். ”ரஜினி பாண்டியன் மகள் நல்லாப் படிக்கிற பொண்ணு. பிளஸ் டூ வில் 85 சதவிகிதத்துக்கு மேல மார்க் வாங்கியிருதுச்சு. தலைவர் ஏற்பாட்டுல ஃபவுண்டேஷன் தொடங்கினப்பவே, மன்றத்துக்காரங்கள்ல கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்துச் சொல்லியிருந்தாங்க. பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டப்படுறவங்க வீட்டுல நல்லா படிக்கிற குழந்தைகள்னா, வந்து அப்ளை பண்ணுங்கன்னு சொன்னாங்க.
ரஜினி பாண்டியன் கொரோனாவுக்குப் பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டார். இப்ப கூலி வேலைக்குதான் போயிட்டிருக்கார். அதனால நானும் இன்னும் சில மன்ற நிர்வாகிகளும் சேர்ந்துதான் ஃபவுண்டேஷனுக்கு மனு போட வச்சோம்.
நாம கொடுத்திருக்கிற தகவல்கள் உண்மைதானான்னு முறைப்படி ஒரு டீம் வச்சு விசாரிச்சு தகுதியான மனுதான்னு தெரிஞ்சதுக்குப் பிறகே உதவி வழங்கப்படுது. பணத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கிட்ட கொடுத்தா அதை அவங்க வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்கிறதாலேயே நேரடியா கல்வி நிறுவனங்களுக்கே செலுத்திடுறாங்க.
உதவி வாங்கினவங்க கிட்ட வெளியில இதைப் பத்திப் பேச வேண்டாம்னு சொல்றாங்கதான். தலைவர் விளம்பரப்படுத்திக்க விரும்பாததாலதான் அப்படிச் சொல்றாங்க. ஆனா தலைவர் ரசிகர்களா எங்களால ஒரு நாலு பேருக்காவது இதைச் சொல்லாம இருக்க முடியலை. அதுக்காக போஸ்டர்லாம் அடிச்சு ஒட்ட மாட்டோம்” என்ற சாதிக் பாட்ஷாவின் தலைமையில் இப்போதே ‘வேட்டையன்’ படத்தை வரவேற்கத் தயாராகி விட்டனர் விருகம்பாக்கம் மன்றத்தினர்.