Thangalaan: "5 மணி நேர மேக் அப்; 10 மணி நேர ஷூட்; எருமை சவாரி" – அனுபவம் பகிரும் மாளவிகா மோகனன்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கே.ஜி.எஃப் எனும் கோலார் தங்க வயல் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களின் போராட்டங்களையும் மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது. இதற்காக கே.ஜி.எஃப் சுரங்கள் இருந்த பகுதிகளுக்கே நேராகச் சென்று படப்பிடிப்பு நடந்தது. தங்கமும், புழுதியும், ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

தங்கலான்| மாளவிகா மோகனன்

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இதில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இது குறித்துப் பேசியிருக்கும் அவர், “கோலார் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ரொம்ப நாட்கள் நடந்தன. படப்பிடிப்பு முடிவதற்குள் 5 முறை டாக்டரை பார்த்திருப்பேன். கண்களுக்கு, தோலுக்கு எனப் பல முறை டாக்டரை பார்க்க வேண்டியிருந்தது.

கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடக்கும் கொடையைக் கூட மறந்து வேலை பார்த்தேன். தினமும் 5 மணி நேரம் உட்கார்ந்து மேக் அப் போட வேண்டியிருக்கும். அதே மேக் அப்பில் 10 மணி நேரம் வரை இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவோம். எல்லாம் முடித்துவிட்டு அறைக்குத் திரும்பும்போதுதான் எங்கெங்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தோலில் என்னென்ன பிரச்னைகள் வந்திருக்கிறது என்பது தெரியும்.

தங்கலான்

படப்பிடிப்பு தளத்தில் மேக் அப் போட்டு உட்கார்ந்து இருக்கும் போது எருமை ஒன்று இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், ‘உங்களுக்கு எருமையைப் பிடிக்குமா?’ என்று கேட்டார். நான் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேன். உடனே எருமையின் மீது உட்கார வேண்டும் என்று சொல்லிவிட்டார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். பிறகு உண்மையிலேயே எருமையின் மீது உட்கார வைத்துப் படப்பிடிப்பு நடந்தது. முன்பே இதுபற்றி எனக்கு ஏதும் சொல்லப்படாததால் பயந்து போய் உட்கார்ந்திருந்தேன். இப்படிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இப்படத்தில் நடந்திருக்கிறது. அனைவரும் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.