விவசாயம் என்றாலே நொடிந்து போகும் ஒரு தொழில், அதில் லாபமில்லை; மழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். விவசாயம் செய்தால் நஷ்டம் வரும் என்ற பேச்சுகளுக்கு மத்தியில் விவசாயத்தில் சாதித்து வருபவர்களும் இருக்கிறார்கள். மற்ற தொழில்களை போலவே இதிலும் ஏற்ற, இறக்கங்கள் உண்டு.
விவசாய விளைபொருள்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பங்களின் சூழ்நிலை மதிப்பீட்டுக் கணக்கெடுப்பின்படி, ஒரு சாதாரண இந்திய விவசாயக் குடும்பம் ஆண்டுக்கு ரூ. 77,124 மட்டுமே சம்பாதிக்கிறது. இது மாதந்தோறும் ரூ. 6,427 என்ற சராசரி ஆகும். மாதச் செலவுகளை ஈடுகட்ட இது போதுமானதாக இருக்காது என்று சொல்கிறது ஆய்வு. அதேபோல சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் அதிகம். அதனால்தான் விவசாயிகளால் பெரிய அளவில் வருமானம் பார்க்க முடிவதில்லை என்ற குரல்களும் ஒலிக்கின்றன.
உண்மையில் சரியான திட்டமிடலுடன் நவீன தொழில்நுட்ப உத்திகளை கையாண்டு சாகுபடியை மேற்கொண்டால், நிச்சயம் விவசாயத்தில் லாபமீட்டலாம். விவசாயத்துறையில் இருப்பவர்களும் செல்வந்தர்களாக உருவெடுக்கலாம். இதற்கு பல்வேறு சாதனை விவசாயிகளை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறோம்.
நம் நாட்டில் சிறு விவசாயிகளாக இருந்து செல்வந்த விவசாயிகளாக சாதித்த சில விவசாயிகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்…
1. சச்சின் காலே
இவர், நாக்பூரைச் சேர்ந்த இயந்திரவியல் பொறியாளர். மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைத் தொடங்கி இவர், 2013 ஆம் ஆண்டில் குர்கான் நகரில் பஞ்ச் லாயிட் நிறுவன மேலாளர் என்ற பதவியில் இருந்து ஆண்டுக்கு ரூ. 24 லட்சம் வருவாய் ஈட்டி வந்தார்.
ஆனால், தனது சொகுசான வாழ்க்கை முறையை துறந்து விவசாயம் பக்கம் கவனத்தை திரும்பினார். இதற்காக மேத்பருக்கு அவர் மாறினார். 2014 ஆம் ஆண்டில், சச்சின் காலே தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். தனது 15 ஆண்டு கால வருங்கால வைப்பு நிதியை, தூய எரிசக்தி மாதிரி அமைப்பதில் முதலீடு செய்தார்.
இதன் விளைவாக, அவரது பண்ணை ஆண்டு முழுவதும் மதிப்புமிக்கதாக இருந்தது மற்றும் அதிகபட்ச லாபத்தைக் கொடுத்தது. தற்போது, சச்சின் நிறுவனம் 200 ஏக்கர் நிலத்தில் பணிபுரியும் 137 மகிழ்ச்சியான விவசாயிகளுக்கு உதவி செய்து சுமார் ரூ.2 கோடி வருவாய் ஈட்டுகிறது.
சச்சின் கூறுகையில், “எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது என்பதால் எல்லாமே சவாலாக இருந்தது. அதனால் நிலத்தை பயிரிடுவது முதல் விதைகளை விதைப்பது வரை அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது” என்றார்.
2. ஹரிஷ் தன்தேவ்
ஹரிஷ் தன்தேவ், தனது அரசு வேலையை விட்டுவிட்டு ராஜஸ்தானில் சோற்றுக் கற்றாழை சாகுபடியை தொடங்கினார் . அதன்பிறகு, ஜெய்சால்மரில் உள்ள தனது பரம்பரை நிலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டார்.
விவசாயிகளின் யோசனைகளை வேளாண்மை நிபுணர்களுடன் இணைக்கும் ஆன்லைன் ஆராய்ச்சியை வளங்கள் மூலம், ஹரிஷ் தன்தேவ் உதவிகளை பெற்றார்.
இதனால், ஹரிஷ் தனது 80,000 மரங்கள் என்ற எண்ணிக்கையை, ஆறு மாதங்களிலேயே ஏழு லட்சமாக உயர்ந்தது. அடுத்த சில ஆண்டுகளில், ஹரிஷ் அதிக நிலம் வாங்கி, தற்போது நூறு ஏக்கரில் கற்றாழை பயிரிட்டுள்ளார்.
மேலும், அவர் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தைசரில் அமைந்துள்ள தன்தேவ் குளோபல் குழும நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது, அதன் ஆண்டு வருவாய் ரூ. 1.5 முதல் 2 கோடி என்றால் நம்ப முடிகிறதா
3. ராம் சரண் வர்மா
ராம் சரண் வர்மா, 1990-ல் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். மேம்பட்ட மற்றும் அதிக லாபம் தரும் விவசாய நுட்பங்களைக் கொண்டு விவசாயத்தில் முன்னேறத் தொடங்கினார். அவரது தொடர் முயற்சிகளும், நவீன விவசாய உத்திகளும் பணக்கார விவசாயி ஆக அவரை மாற்றியது.
இப்போது ராம் சரணிடம் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் 100 ஏக்கரில் வாழைத்தோட்டம் எஞ்சிய 100 ஏக்கரில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்துள்ளார்.
விரைவிலேயே பணக்கார விவசாயி ஆன போதும் சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற விவசாயிகளுக்கு தான் கற்ற நுட்பங்களை கொண்டு சேர்ந்தார்.
ராம் சரண் வர்மாவின் விவசாய சேவைகளை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு 2019 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
4. ராஜீவ் பிட்டு
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான ராஜீவ் பிட்டு, தொழில் ரீதியாக பட்டயக் கணக்காளர். ஆனால், இவர் ஒரு முழுநேர விவசாயி. தனது பட்டய கணக்காளர் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை விட விவசாயத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டி வருகிறார்.
நம்மில் பலர் நமது குழந்தைகளை விவசாயம் பக்கம் திரும்பவிடாமல் செய்துவிட்டோம். அதுபோலவே ராஜீவ் பிட்டுவின் மூன்று வயது மகள், அவரது மூதாதையர் கிராமத்திற்குச் சென்றபோது விவசாயிகளுடன் ஈடுபாடு காட்ட மறுத்துவிட்டார். தனது குழந்தையின் எண்ணத்தை மாற்ற விரும்பிய ராஜீவ் பிட்டு, முதல் வேலையாக தலைநகர் ராஞ்சியில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள குச்சு என்று கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயப் பணிகளை மேற்கொண்டார்.
ஆரம்பத்தில் குத்தகை பணம் செலுத்தும் அளவுக்கு கூட அந்த நிலத்தில் இருந்து வருவாய் கிடைக்கவில்லை. அந்த நிலத்தில் விளைந்த விளைபொருளில் மூன்றில் ஒரு பகுதியை நில உரிமையாளருக்கு வழங்கி, அதை சரிகட்டினார். வறண்ட பூமியில் சொட்டு நீர் பாசனம் மற்றும் மட்கு உரம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கினார்.
2014 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ராஜீவ் தர்பூசணி மற்றும் முலாம்பழங்களை சாகுபடி செய்து மகசூல் பெற்றார். கத்திரி, வெள்ளரி, தர்பூசணி மற்றும் பலவகை காய்கறிகளை பயிரிட்டதன் மூலம், ஆண்டுக்கு 15 லட்சம் முதல் 16 லட்சம் வரை லாபம் ஈட்டத் தொடங்கினார். இன்று இந்தியாவின் பணக்கார விவசாயிகளில் ஒருவராக ஜொலிக்கிறார் ராஜீவ் பிட்டு.
5. விஸ்வநாத் போபடே
மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் வறட்சியின் பிடியில் உள்ள பஹிர்வாடி தான் விவசாயி விஸ்வநாத் போபடேயின் சொந்த ஊர். இவர், ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ரூ.7 லட்சம் சம்பாதித்தவர்.
அத்தகைய நுட்பங்களை கையாண்டதுடன் வீண் செலவுகளை கண்டறிந்து குறைத்துள்ளார்.
கம்பி வேலி அமைத்து அதன் மீது படரக்கூடிய கொடி வகை தாவரங்களை சாகுபடி விளைச்சலை அதிகரித்துக் காட்டினார். இவரது பண்ணைத் தோட்டத்தில் இரண்டு கூலித் தொழிலாளர்கள் மடுட்மே உதவிக்கு உள்ளனர்.
போபடேவும் அவரது குடும்பத்தினருமே சாகுபடிகளை பராமரிக்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டனர். இதனால் கூலி உள்ளிட்ட செலவினங்கள் குறைந்து, லாபம் அதிகரித்தது.
6. ரமேஷ் சவுத்ரி
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வசிக்கும் விவசாயி ரமேஷ் சவுத்ரி உள்ளூரில் பிரபலமானவர். அவருக்கு ஜெய்ப்பூரில் உள்ள மூன்று கிரீஸ்டீன் பாலிஹவுஸ் மற்றும் ஒரு கிரீன் ஹவுஸின் உரிமையாளர் .
அவர் தக்காளி, வெள்ளரி போன்றவற்றை பாலி ஹவுஸிலும் மலர் சாகுபடியை கிரீன்ஹவுஸிலும் மேற்கொண்டு வருகிறார். தவிர, திறந்த வெளியிலும் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
இவை அனைத்திலும் இருந்தும் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார் ரமேஷ் சவுத்ரி. இதன் பலனாக ரமேஷ் விலையுயர்ந்த கார்களையும், ஆடம்பரமான பங்களாக்களையும் வைத்திருக்கிறார்.
பங்களாவில் வசித்தாலும் பழைய நிலையை என்றும் மறக்காத ரமேஷ் சவுத்ரி, அங்கு தனது கார்களுடன் கால் நடைகளுக்கும் என்று ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கிறார்.
7. தியானேஷ்வர் போட்கே
தியானேஸ்வர் போட்கே, விவசாயத்தில் பல சத்தமில்லாத சாதனைகளை புரிந்ததற்காக மத்திய அரசின் விருதை பெற்றவர். இவரது ‘அபினவ் ஃபார்மர்ஸ் கிளப்’ என்ற ஒன்றை நிறுவினார். பல விவசாயிகள் வறுமையில் வாடுவதையும் கடனில் சிக்கித் தவிப்பதையும் கண்ட போட்கே, இம்முயற்சியை கையில் எடுத்தார்.
அதன்படி, கடனில் தத்தளிக்கும் விவசாயிகள் நிலத்தை அடமானம் வைப்பதை கண்டு அவர்களுக்கு ஆலோசனைகளையும் சாகுபடி நுட்பங்களையும் அளித்தார்.
தோட்டக்கலை மற்றும் வழக்கத்திற்கு மாறான காய்கறிகளை சாகுபடி செய்யுங்கள்; அதில் கிடைக்கும் வருவாயில் கடனை அடையுங்கள் – நிலத்தை அடமானம் வைக்காதீர்கள் என்று அறிவுறுத்தினார்.
தியானேஷ்வர் போட்கேவின் அமைப்பானது, இடைத்தரகர் இல்லாமல் நேரடி சந்தைப்படுத்தல் மூலம் விவசாயத்திற்கு பேருதவி புரிந்தது.
8. கேமா ராம்ஜி
விவசாயத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து பாலைவனத்திலும் பயிரிட்டு விளைச்சலை காணும் நாடு இஸ்ரேல். அங்கு கோதுமை, நெல் போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. மத்திய அரசு சார்பில் இஸ்ரேல் சென்ற கேமா ராம்ஜி, அங்குள்ள நுட்பங்களை நேரில் கண்டார்.
இந்தியாவில் பாலைவனத்தை கொண்டிருக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த கேமா ராம்ஜியும், இஸ்ரேல் வழியில் பின்பற்றி விவசாயம் செய்யத் தொடங்கினார். இன்று அவருடைய ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடி ரூபாய்…
ஜெய்ப்பூர் மாவட்டம், குடா குமாவதன் கிராமம் தான் கேமா ராம்ஜியின் ஊர். இஸ்ரேல் நுட்பத்தை பின்பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட விவசாய முறைகளை(பாலி ஹவுஸ் ஃபார்மிங்) பின்பற்றத் தொடங்கினார்.
இன்று, அப்பகுதியில் சுமார் 200 பாலி ஹவுஸ்கள் கட்டப்பட்டுள்ளன; குட்டி இஸ்ரேல் என்றே அப்பகுதி அறியப்படுகிறது. தொழில்நுட்பத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்து லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் கேமா ராம்ஜி.
9. கீனா பாய் படேல்
சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை; எதிர் நீச்சல் போட்டு அவற்றை கடந்து பெறப்படும் வெற்றியில் தான் ஆத்ம திருப்தி இருக்கிறது. அதற்கு உதாரணமாக திகழ்கிறார் மாற்றுத்திறனாளியான ஜீனா பாய் படேல். விவசாயத்தில் செய்த சாதனைகளுக்காக அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர்.
இவர், 60,000 பேருக்கு உதவுவதற்காக மாதுளை பயிரிட்டார். அதில் கிடைத்த லாபத்தை அந்த மக்களுக்காக செலவிட்டார்.
2004-ல், 18,000 மரக்கன்றுகளை தன்னுடைய வயலில் நட்டார். அவருடைய ஒவ்வொரு ஏக்கர் தோட்டமும் அவருக்கு 10 லட்சம் லாபத்தை தந்தது. போலியோவால் இரு கால்கள் பாதித்த போதும் அது கீனா பாயின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
விவசாயிகளே, உங்களுக்கான வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. கடும் உழைப்பு, நவீன நுட்பங்கள், சந்தையின் தேவை போன்றவற்றை அறிந்து நீங்களும் விவசாயத்தில் உச்சம் தொடலாம்.