கவுதம் கம்பீருக்கு பிடித்த அந்த கிரிக்கெட் வீரர்..! வாழ்த்து சொன்னதால் ஆனந்த கண்ணீர்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர், இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பயிற்சியாளர் பணியை தொடங்கியிருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இன்று விளையாட இருக்கிறது. அதற்கு முன்பாக கவுதம் கம்பீருக்கு சர்பிரைஸான வாழ்த்து செய்தியால் அவர் நெகிழ்ச்சியடைந்தார். அதுவும் அவருக்கு பிடித்தமான இந்திய அணியின் முன்னாள் வீரரிடமிருந்து வந்ததால், கம்பீர் ஆனந்த கண்ணீரே விட்டுவிட்டார். அந்த வாழ்த்து செய்தியை அனுப்பியது வேறு யாருமல்ல, இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட். 

இலங்கை சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய அணி, அந்த அணியுடனான 20 ஓவர் தொடரில் முதலில் விளையாடுகிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி பல்லேகலெவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் முழுநேர டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட இருக்கிறார். இந்த சூழலில் கம்பீருக்கு ராகுல் டிராவிட் அனுப்பியிருக்கும் வாழ்த்து செய்தியில், இந்திய கிரிக்கெட் அணி இன்னும் புதிய உயரத்துக்கு செல்லும் என தெரிவித்துள்ளார். 

இதற்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பதில் அளித்துள்ள கவுதம் கம்பீர், ” இந்த வாழ்த்து செய்திக்கு எப்படி ரியாக்ட் செய்வது என உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நான் கிரிக்கெட் விளையாடியபோதே என் மனத்துக்கு நெருக்கமானவராக ராகுல்பாய் இருந்தார். நான் பார்த்ததில் அவர் ஒருவர் தான் தன்னலமற்ற கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டுக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்க தயாராகவே இருப்பார். நான் மட்டுமல்ல, இப்போது இருக்கும் இளைய தலைமுறையும் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. 

ஒரு பயிற்சியாளராக இந்திய அணியை மட்டுமல்ல, ராகுல் பாயும் பெருமைப்படும் அளவில் என்னுடைய பயிற்சி இருக்கும். அதற்காக வெளிப்படையான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன். பொதுவாக எதற்கும் நான் உணர்ச்சி வசப்படமாட்டேன். உண்மையிலேயே ராகுல் பாயின் இந்த வாழ்த்து என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது” என தெரிவித்துள்ளார். ராகுல் பாய் இந்திய கிரிக்கெட் அணியை ஒரு சாம்பியன் அணியாக ஒப்படைத்திருப்பதால், அதனை அடுத்த இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் ஏற்பட்டிருப்பதாகவும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.