சென்னை: டெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி, முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் பழைய கட்டிடங்களை முழுமையாக இடித்துவிட்டு மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார். அதன்படி, விரிவான வடிவமைப்பு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன.
புதியதாக கட்டப்படவுள்ள இக்கட்டிடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்பக்கழகம், சென்னை ஐஐடி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக பொதுத் துறையால் தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.257 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இக்கட்டிடம், 3 அடித்தளங்கள், தரைதளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாக, மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இக்கட்டிடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக, எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, திருமாவளவன், மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, சு.வெங்கடேசன், துரை வைகோ, வை.செல்வராஜ், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.