புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நிர்மலா சீதாராமன், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அவர் பேசியதை நாங்கள் அனைவரும் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நேரம் ஒவ்வொருவர் மேஜை முன்பும் இருந்த திரையில் காட்டப்பட்டது. திரையிலேயே முதல்வர்கள் பேசுவதை பார்க்க முடியும். அந்த வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதையும் பார்த்தோம். தான் பேசும்போது, தனது மைக் துண்டிக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் மம்தா பானர்ஜி கூறி இருக்கிறார். இது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு முதல்வருக்கும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நேரம் முடியும்போது அதை நினைவூட்டுவதற்காக கூட்டத்தை நிர்வகித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மைக்கில் தட்டி ஒலி எழுப்பினார். யாரெல்லாம் நேரத்தைக் கடந்து பேசினார்களோ அவர்கள் அனைவர் விஷயத்திலும் இது நடந்தது. ஆனால், தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையல்ல.
மம்தா பானர்ஜி கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அவரும் மேற்கு வங்கத்திற்காக பேசினார். அதோடு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்காகவும் பேசுவதாக அவர் கூறினார். அவர் பேசினார். நாங்களும் கேட்டோம். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்பது அவருக்கு நினைவூட்டப்பட்டது. கூடுதல் நேரம் வேண்டும் என்று கேட்டு அவர் பேசி இருக்கலாம். சில மாநில முதல்வர்கள் அவ்வாறு பேசினார்கள். ஆனால், மம்தா பானர்ஜி அவ்வாறு செய்யவில்லை.
மாறாக, குற்றம் சாட்டுவதற்காக அதை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார். மேலும், தனது மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். அவர் அவ்வாறு பேசியது துரதிர்ஷ்டவசமானது. பொய்யின் அடிப்படையில் கதையை உருவாக்குவதற்கு பதிலாக, அவர் உண்மையைப் பேச வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் முன் தெரிவித்திருந்தார். “நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது எனக் கூறினேன். தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். ஏன் என்னை தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றேன். இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாறாக, உங்கள் கட்சிக்கும், உங்கள் அரசாங்கத்துக்குமே அதிக வாய்ப்புகளைக் கொடுக்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்ற போதும், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.