நீலகிரி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் மறைவு: மோடி இரங்கல், அண்ணாமலை அஞ்சலி

கோவை: நீலகிரியின் முன்னாள் பாஜக எம்.பி, மாஸ்டர் மாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனியைச் சேர்ந்தவர் மாஸ்டர் மாதன் (93). இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள். ஒரு மகள் உள்ளனர். இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் இத்தலார் ஆகும். பாஜகவைச் சேர்ந்த இவர் தமிழக பாஜக துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும், கடந்த 1998-ம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக பாஜக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற்றார். பின்னர், 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று 2004-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்.பி இவர் ஆவார்.

பாஜக மூத்த தலைவரான இவர், சமீப காலமாக உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று கோவையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூலை 26) இரவு முன்னாள் எம்.பி மாஸ்டர் மாதன் வீட்டில் காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோவையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று (ஜூலை 27) கோவைக்கு வந்து மாஸ்டர் மாதனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், கோவை, நீலகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.



மாஸ்டர் மதன் மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மாதனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூரப்படுவார். தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘‘நீலகிரி மக்களின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் அயராது உழைத்தவர். அவரது மறைவு தமிழக பாஜகவுக்கு பேரிழப்பு. மாஸ்டர் மாதன் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’எனக் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.