மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தமிழகம் சந்தித்த 2 பேரிடர் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்போக்குடன் தமிழகத்தை வஞ்சித்த மத்திய பாஜக அரசை இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னையில் பாரிமுனை மற்றும் கிண்டி உள்ளிட்ட இரண்டு இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்துக்கென எவ்வித சிறப்பு திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படாததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.



சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் மயிலை பாலு, பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சின்னமலை பகுதியில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக எம்பிக்கள், மற்றும் எம்எல்ஏக்கள், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “மத்திய பட்ஜெட்டில், இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்துள்ளது” என்று தயாநிதி மாறன் பேசினார்.

திருச்சியில், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், பழனியான்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி பேசுகையில்: “மைனாரிட்ட மக்களுக்கு எதிராக இருக்ககூடியவர்கள் மைனாரிட்டி பாஜக. அந்த மைனாரிட்டி ஆட்சியில், பிரதமராக நரேந்திர மோடி நீடிக்க வேண்டும் என்றால், பாஜக ஆட்சிப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்றால், பிஹார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள், அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள், அக்கட்சிகளின் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இந்த இரண்டு மாநிலங்களின் மேல் அவர்களுக்கு அக்கறை இருப்பதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. பாஜக ஆட்சியில் இருக்க அந்த இரு மாநிலங்களின் தயவு தேவை. அந்த தயவுக்காக பாஜக, அவர்கள் எதைக் கேட்டாலும் கொடுக்க தயராக இருக்கிறது. இப்படி தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, ஒரு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார்.” என்று பேசினார்.

இதேபோன்று, மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.