Matheesha Pathirana: இந்தியன் பிரீமியர் லீக் 2025 பதிப்பில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நான் எந்த அணியில் விளையாடுவேன் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். கடந்த சில சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக மதீஷா பத்திரனா இருந்து வருகிறார். பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் இவை தோனி தான் கண்டுபிடித்து சென்னை அணியில் சேர்ந்தார். அதில் இருந்து நட்சத்திர பவுலராக மாறியுள்ளார். சென்னை அணியில் விளையாடிய பிறகு தான் சர்வதேச இலங்கை அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
சென்னை அணிக்கு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி பல போட்டிகளை தனி ஆளாக வென்று கொடுத்துள்ளார். மேலும் ஒட்டு மொத்த ஐபிஎல் போட்டிகளிலும் சிறந்த டெத் பவுலர்களில் ஒருவராக மதீஷ பத்திரன திகழ்கிறார். துல்லியமான யார்க்கர்கள் தொடங்கி, பவுன்சர் வரை சிறப்பாக பந்துவீசும் திறமை கொண்டவர் பத்திரனா . கடந்த 2022ம் ஆண்டு மதீஷா பத்திரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அதில் இருந்து சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராக மாறி உள்ளார். 2023ம் ஆண்டு தோனி தலைமையில் சென்னை அணி கோப்பையை வென்ற போது அணியின் வெற்றிக்கு உதவினார். மதீஷ பத்திரன 12 போட்டிகளில் 8.01 என்ற பொருளாதாரத்தில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பல இக்கட்டான சூழ்நிலைகளில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். தோனியும் அவரின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இப்படி சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பத்திரனா அடுத்த ஆண்டு சென்னை அணியில் விளையாடுவது சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அது குறித்தான விவாதங்கள் அணியின் உரிமையாளர்களிடையே நடைபெற்று வருகிறது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த சீசனில் மதீஷ பத்திரனா இடம் பிடிப்பாரா இல்லையா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய மதீஷா பத்திரனா, “2025ல் சென்னை அணியில் நான் இருப்பேனோ இல்லையோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் சாம்பியன் ஆகும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இது தற்போது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இலங்கை டி20 அணியில் முக்கிய வீரராக பத்திரனா இருந்து வருகிறார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. இதற்கான இலங்கை அணியில் பத்திரனா முக்கிய பங்கு வகிக்கிறார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி இன்று தொடங்கி, கடைசி இரண்டு ஆட்டங்கள் முறையே ஜூலை 28ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் தொடங்க உள்ளது.