மகனின் ஆடம்பர திருமணம் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ, சுற்றுச்சூழல் பிரச்னையை எதிர்கொண்ட தருணத்தில் அருகில் மாம்பழத் தோட்டம் ஏற்படுத்தி சிக்கலை சாதுர்யமாக எதிர்கொண்டதோடு அந்த தொழிலையும் லாபகரமாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
கடந்த 1997-ம் ஆண்டில், குஜராத்தில் உள்ள ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையில் கடுமையான மாசுபாடு சவால்களை எதிர்கொண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். இந்த சிக்கலுக்கு தொலைநோக்கு சிந்தனையுடன் தீர்வை கண்டது அந்த நிறுவனம்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு இணங்கி நடக்கவும் ஏதுவாக, ஜாம் நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தை சுற்றியுள்ள தரிசு நிலங்களை பரந்து விரிந்த மாம்பழத் தோட்டமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்தது.
இந்த முன்முயற்சி மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமின்றி, தொழில்துறை வளாகத்தைச் சுற்றி ஒரு நிலையான பசுமை போர்வையை ஏற்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
திட்டத்தின்படி, 600 ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பெயரிடப்பட்ட பழத்தோட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட ரகங்களை உள்ளடக்கிய 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மா மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
கேசர், அல்போன்சோ, ரத்னா, சிந்து, நீலம் மற்றும் அமரபாலி போன்ற இந்திய ரகங்களுடன், அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த டாமி அட்கின்ஸ் மற்றும் கென்ட், இஸ்ரேலைச் சேர்ந்த லில்லி, கெய்ட் மற்றும் மாயா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.
இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரில் அதிக அளவு உப்பு இருந்தது. மந்தோட்டத்துக்கு தூய்மையான நீரை வழங்கும் நோக்கில் நீரில் உள்ள உவர்ப்பு தன்மையை நீக்கும் சுத்திகரிப்பு ஆலை ஏற்படுத்தப்பட்டது. சில நேரங்களில் மாமரங்கள் வறட்சியை தாக்குப்பிடிக்கும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை கையாண்டது.
அத்துடன் நீர் சேமிப்பு அமைப்பு, சொட்டு நீர் பாசன முறை மற்றும் ஒரே நேரத்தில் உரமிடுதல் போன்ற மேம்பட்ட விவசாய நுட்பங்களால், பழத்தோட்டத்தில் விளைச்சல் பல்கிப் பெருகின.
ஆண்டுதோறும் சுமார் 600 டன் பிரீமியம் மாம்பழங்களை உற்பத்தி செய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு, ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது ஆசியாவின் முதன்மையான மாம்பழ ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொந்த செயல்பாடுகளை தாண்டி விவசாயிகளுக்கு சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறது. உள்ளூர் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை விநியோகம் செய்கிறது. எதை எடுத்தாலும் அதில் ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என்று விரும்புபவர் முகேஷ் அம்பானி. அந்த வகையில் இந்த மாந்தோட்டம் இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறது.