Cinema Roundup: சூரி அப்டேட்; ஓ.டி.டி-யில் த்ரிஷா; சிங்கத்தை வைத்து தமிழ் படம் -டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்!

ஓ.டி.டி-யில் கால் பதிக்கும் த்ரிஷா!

நேரடியாகப் புதிய திரைப்படங்களும் ஒ.டி.டி யில் வெளியாகிற முறை கொரோனா காலகட்டத்தில்தான் தொடங்கியது. அதன் பிறகு பல உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களும் சீரிஸ்களும் நேரடியாக ஒ.டி.டி தளங்களில் வெளியாகின. தற்போது த்ரிஷா நடித்திருக்கும் ‘பிருந்தா’ வெப் சீரிஸும் நேரடியாக ‘ஜீ5’ ஒ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது. த்ரிஷா நடித்த வெப் சீரிஸ் ஒ.டி.டியில் நேரடியாக வெளியாவது இதுதான் முதல் முறை. தெலுங்கில் படமாக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடா, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதில் த்ரிஷாவுடன் நடிகர் ப்ரித்விராஜின் சகோதரரான இந்திரஜித்தும் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 2-ம் தேதியன்று இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது.

7 வருட காத்திருப்புக்கான பதில் !

இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கியிருக்கும் ‘மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 2015-ல் இத்திரைப்படத்தின் முதல் பாதியைக் குழந்தை நட்சத்திரங்களை வைத்து எடுத்திருந்தார் ஹலீதா. அதே குழந்தை நட்சத்திரங்கள் வளரும் வரை காத்திருந்து இரண்டாம் பாதியை எடுத்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டில் கூறியிருக்கிறார்.

“படம் தொடங்கும்போது இந்த பிளான் எதுவும் இல்ல. முதல் பாதியில இந்த குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வச்சிட்டு அவங்களவிட வயசு அதிகமாக இருக்கிற நடிகர்களை இரண்டாம் பாதியில நடிக்க வைக்கிறதுக்கு திட்டமிட்டேன். ஆனால், முதல் பாதி எடுக்கும்போது அந்த குழந்தை நட்சத்திரங்கள் அழகாக நடிச்சு என்னை வியப்பில் ஆழ்த்தினாங்க. இவங்களை மாதிரியே வயசு அதிகமாக இருக்கிற நடிகர்கள் அப்போ இருந்தாங்க. ஆனால், எனக்கு அப்படி பண்றதுக்கு மனசு வரல. முதல் பாதியில் நடிச்ச நடிகர்கள் மாதிரியான நடிப்பு வராதுனு தீர்க்கமாக இருந்தேன்.” எனக் கூறியிருக்கிறார்.

சூரி

திரைக்கு வருகிறது கொட்டுக்காளி!

‘கூழாங்கல்’ திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. முதல் படம் ஏற்படுத்திய உரையாடலுக்குப் பிறகு இவர் மீது பலர் வைத்திருக்கும் நம்பிக்கையும் அதிகரித்தது. இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

பிரபு சாலமனின் மேஜிக்!

இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக ஒரு உன்மையான சிங்கத்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். உன்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் ஆசியத் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகனான விஜய் ஶ்ரீ ஹரி நடிக்கிறார். பிரபு சாலமனின் மகன் சாமுவேல் சஞ்சய் இத்திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

Mambo & Ranveer Singh

ரன்வீர் சிங்கின் அடுத்த ஸ்டெப்!

இயக்குநர் பிரசாந்த் வர்மாவுடன் ஒரு திரைப்படம், இயக்குநர் ஷங்கருடன் அந்நியன் இந்தி ரீமேக் எனப் பலமான லைன் அப்பை தனது கைவசம் வைத்திருந்தார் ரன்வீர் சிங். ஆனால், இந்த ப்ராஜெக்ட்கள் இரண்டும் கைவிடப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ரன்வீர் சிங். ‘URI – The Surgical Strike’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமடைந்த இயக்குநர் ஆதித்யா தருடன் இணையவிருக்கிறார். இத்திரைப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், மாதவன், அக்‌ஷய் கண்ணா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.