‘இறுதிச் சுற்றி’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா, தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் ‘Sarfira’ என்று இயக்கி, வெளியிட்டிருந்தார்.
அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில், சுதா கொங்கராவின் நேர்காணல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சாவர்க்கர், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து அன்றைய சமூக எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன் மனைவியைக் கல்வி கற்ற ஊக்கப்படுத்தியதாகச் சுதா கொங்கரா கூறியிருந்தார். மேலும், “ஊரில் அனைவரும் பெண்கள் படிப்பதற்கு எதிராக இருந்தபோதும் தன் மனைவிக்கு உறுதுணையாக இருந்து படிக்க வைத்தார்” என்று கூறியிருந்தார்.
ஆனால், இதைச் செய்தது ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்கள் கல்விக்காகப் போராடி, அவர்களுக்காகப் பள்ளி நடத்திய ஜோதிபா பூலே. சாவித்ரிபாய் புலேவின் கணவரான ஜோதிபா புலேதான், அன்றைய சமூக எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன் மனைவிக்குக் கல்வி கற்க ஊக்கமளித்து, அவருக்குத் துணையாக இருந்தவர். சாவித்திரிபாய் புலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராவார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஊர்மக்கள் கற்களை இவர்கள் மீது வீசியபோதும் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்குக் கல்விக் கற்றுக் கொடுத்தவர்கள் ஜோதிபா புலே மற்றும் சாவித்திரிபாய் புலே. இயக்குநர் சுதா கொங்கரா, ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலேவின் பெயரைச் சொல்லுவதற்குப் பதிலாக சாவர்க்கர் என்று மாற்றிச் சொல்லிவிட்டார்.
சமூகவலைத்தளங்களில் இந்தத் தவறைப் பலரும் சுட்டிக் காட்ட, தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்காணலில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும்.
அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சிலிருந்த தகவல் பிழையைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.