புதுடெல்லி: ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குஜராத், உத்தராகண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2022-ல் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களாக பணியில் சேரும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் பணி செய்வார்கள் என்றும், அதன் பிறகு அவர்களில் 25 சதவீதத்தினர் தகுதியின் அடிப்படையில் ராணுவத்தில் நிரந்தர பணியில் (15 ஆண்டுகள்) இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதனால் இதுவரை நிரந்தர வேலைவாய்ப்பாக இருந்து வந்த உயரிய ராணுவப் பணி தற்காலிக வேலையாக தரம் தாழ்த்தப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவந்தன.
இதனிடையில், ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று குஜராத், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம் மற்றும் ஒடிசா என பாஜக ஆளும் 6 மாநிலங்களில் அறிவிப்பு வெளியானது.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மாநில காவல் துறை மற்றும் ஆயுதப்படை ஆட்சேர்ப்பில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் வனக் காவலர்களுக்கான ஆள்சேர்ப்புகளில் அக்னி வீரர்களுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். அக்னி வீரர்களுக்கு நிலையான இடஒதுக்கீடு வழங்க தேவையான வழிகாட்டுதலை மாநில அரசு விரைவில் வெளியிடும் என்று முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
நாட்டுக்கு சேவை செய்து திரும்பும் அக்னி வீரர்களுக்கு காவல் துறை மற்றும் பிஏசி படைகளில் சேர வெயிட்டேஜ் வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
மாநிலத்தின் சீருடைப் பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் மாஜி அறிவித்துள்ளார்.