அந்திமழை நிறுவனரும், நிறுவிய ஆசிரியருமான மருத்துவர் அந்திமழை ந.இளங்கோவன் இன்று (ஜூலை 28) உயிரிழந்திருக்கிறார். மாரடைப்பால் உயிரிழந்த அவருக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில்…
கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அந்திமழை என்ற கையெழுத்துப் பிரதியைத் தொடங்கினார் ந.இளங்கோவன். அவை மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு கால்நடை உயிரியியல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். சென்னையிலிருந்து வெளிவரும் குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ், குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களில் எழுதி, தனது எழுத்து ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார்.
1999ஆம் ஆண்டு விண்நாயகன் என்ற மாதம் இருமுறை வரும் இதழில் முழுநேர இதழாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு இவருக்கு முந்தைய சம்பளத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கிடைத்தது. ஓர் ஆண்டு காலத்துக்குள் விண்நாயகன் இதழ் மூடப்படும் நிலையில் இருந்ததால், அதிலிருந்து விலகினார். பெங்களூருவுக்குத் திரும்பிவந்தவர், மீண்டும் கால்நடைகள் தொடர்பான ஒரு தொழில் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கடுத்த ஆண்டு, அவர் இண்டோபையோகேர் என்ற கால்நடை சுகாதாரத் தொழில் நிறுவனத்தில் பெங்களூரில் வேலையில் சேர்ந்தார். தேசிய வணிகத் தலைவராக பணி உயர்வு அளிக்கப்பட்டு பரோடா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பிறகு 2007ஆம் ஆண்டு இளங்கோவன் தனது கனவான ஐரிஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தன் சேமிப்பில் இருந்த 16 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். நூறு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையில் நிறுவனத்தைத் தொடங்கியவர், ஆரம்பத்தில் நாய்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பு வகைகள், நாய்களுக்கான பிஸ்கட் வகைகள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தினார்.
பின்னர் 2008ஆம் ஆண்டு தன் நண்பர் ஒருவர் நடத்திவந்த வேபா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் கோழிப் பண்ணைகளுக்கான இணை உணவுப் பொருள்களைச் சந்தைப்படுத்தினார். இளங்கோவன், தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர். ‘கரன்சி காலனி’, ’ஊர்கூடி இழுத்த தேர்’ ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.