இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று இரண்டாவது போட்டியில் விளையாடியது. பல்லக்கேலே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்ய, இலங்கை அணி பேட்டிங் ஆடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக ஆடிய நிஷானகா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா 53 ரன்கள் விளாசினார். குஷல் மென்டிஸ் தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியின் கடைசி 7 விக்கெட்டுகள் வெறும் 31 ரன்களுக்குள்ளாகவே விழுந்தது. நேற்றைய போட்டியில் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது இலங்கை அணி. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், அக்சர் படேல், ஹர்திக்பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங் இறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் கண்டனர். 3 பந்துகளில் இந்திய அணி 6 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்திய அணியில் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. நேற்று போட்டியில் ஓப்பனிங் ஆடிய சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு கழுத்தில் பிடிப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வெடுக்குமாறு இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவர்கள் குழு அறிவுறுத்தியது. அதனால் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். பெரும் போராடத்துக்குப் பிறகே அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.
ஏனென்றால் எல்லா தொடர்களிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக ஆடியபோதும் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதனால் சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனம் எழுந்தது. பிசிசிஐ வேண்டுமென்றே சஞ்சு சாம்சனை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கவுதம் கம்பீர் வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் சஞ்சு சாம்சனுக்கு முதல் போட்டியில் வாய்ப்பு கொடுக்காமல் விட்டது, பிசிசிஐயின் ஒருதலைபட்ச நடவடிக்கையை காட்டுவதாக எல்லோரும் குற்றம் சாட்டினர். இவ்வளவு விமர்சனங்களுக்குப் பிறகே அவர் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் களம் கண்டார்.
அவர் இப்போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்றால் கூட இன்னும் சில போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்திருக்கிறது.