சமீப காலங்களாக கூகுள் மேப்ஸ் தவறான வழியைக் காட்டி பயணிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியாகின. கடினமான வழிகளை காட்டி பயணிகளை தவறாக வழி நடத்தியதாக, பலமுறை கூகுள் மேப்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது. கூகிள் மேப்ஸ் காட்டிய வழியில் சென்ற, கார் ஒன்று ஆற்றின் நடுவில் சிக்கிக்கொண்ட சம்பவம் கூட பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இந்திய பயணிகள் எதிர்கொள்ளும், சில பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை அளிக்கும் வகையில், இந்தியாவில் கூகுள் மேப் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
குறுகலான சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து அலர்ட் செய்யும் செயற்கை நுண்ணறிவு அம்சம் முதல், எலக்ட்ரிக் வாகனம் சார்ஜிங் நிலையங்களை கண்டுபிடிப்பது வரை, புதிய அமசங்கள் பல வகைகளில் இந்திய பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது.
நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ள குறுகலான பாதையை வழிகாட்டியதாக, பலமுறை கூகுள் மேப்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்து நிலையில், இப்போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, நான்கு சக்கர வாகனங்கள் குறுகிய சாலைகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்கும் வகையில் வழிகாட்ட உதவும், புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
செயற்கைக்கோள் படங்கள், ஸ்ட்ரீட் வியூ மற்றும் பிற தொழில்நுட்ப தரப்புகளை பயன்படுத்தி, சாலையின் அகலத்தை மதிப்பிட்டு, அதற்கேற்ற வகையில் வாகனங்களுக்கு வழிகாட்டும் அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணம் செய்யும் போது மிகவும் குறுகலான சாலைகள் வந்தால், அது குறித்த எச்சரிக்கையை கூகுள் உடனே வழங்கும். இதனால் நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் வேறு வழியை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த அம்சம் முதலில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட எட்டு இடங்களில் ஏற்படுத்தப்படும் என்றும், பின்னர் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும் கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய பயணிகள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை, மேம்பாலத்தில் செல்லலாமா வேண்டாமா என்பது குறித்த குழப்பம் தான். பாதையின் நடுவில் மேம்பாலம் இருக்கும் போது, மேம்பாலத்தின் மீது ஏற வேண்டுமா, அல்லது கீழிருந்து செல்ல வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும்.இதனை தீர்க்கும் வகையில், கூகுள் மேப்ஸ் இப்போது, வாகன ஓட்டுநர்களுக்கு, பாதையில் வரவிருக்கும் பாலம் குறித்த அலர்ட்டுகளை வழங்கி உதவும். மேலும் மேம்பாலங்கள் இப்போது வரைபடங்களில் தனியாக தோன்றும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மேலே போக வேண்டும் என்றால், டேக் ஃபிளையோவர் இன்டிகேட்டர் தோன்றும். நாட்டின் 40 முக்கிய நகரங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் குறித்த தகவல்களை கூகுள் மேப்ஸில் வழங்க புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னணி மின்சார வாகன சார்ஜிங் நிறுவனங்களுடன் இணைந்து, செயல்பட திட்டமிட்டுள்ள கூகிள், சார்ஜிங் ஸ்டேஷன் குறித்த தகவல்களை அளிக்கும். எந்த வகையான எலக்ட்ரிக் வாகனம் சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து, அதற்கு ஏற்ப தகவல்களை வழங்கும்.