‘‘ககன்யான் வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்’’ என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன், இஸ்ரோ மேற்கொண்டுள்ள திட்டம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் மக்களவையில் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விண்வெளித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இந்திய விண்வெளி நிறுவனம் இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் ஒன்றை மேற்கொள்கிறது. இதற்காக ‘ஆக்ஸிஓம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இஸ்ரோவும், நாசாவும் இணைந்து கூட்டுமுயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக ஆக்ஸிஓம் நிறுவனத்துடன் விண்கல ஒப்பந்தத்தில் இஸ்ரோ கையெழுத்திட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்படும். இந்த விண்கலத்தில் ககன்யான் திட்டத்துக்காக தேர்வுசெய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை விமானிகள் நான்கு பேரில் ஒருவர் செல்கிறார்.
ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களுமே ரஷ்யாவில் ஏற்கனவே விண்வெளி பயணத்திட்டத்துக்கான பயிற்சியை முடித்துள்ளனர். அவர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ககன்யான் திட்டத்துக்கான விண்கல தயாரிப்பு பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திட மற்றும் திரவ எரிபொருளில் இயங்கும் ராக்கெட் என்ஜின்கள் தயார் நிலையில் உள்ளன. சி32 கிரையோஜெனிக் என்ஜின் நிறைவடையும் நிலையில் உள்ளது. ககன்யான் விண்கலம் தயாரானவுடன் இந்திய வீரர்கள் 3 பேர் விண்வெளியில் 400 கி.மீ உயரத்தில் சுற்றுவட்டப் பாதையில் 3 நாள் பயணம் மேற்கொண்டு பூமி திரும்புவர். ககன்யான் திட்டம் அடுத்தாண்டு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.