‘‘தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும்’’ – தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து, தண்ணீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விவசாய மக்களுக்கு தேவையான தண்ணீரை கேட்ட போது கொடுக்காத கர்நாடகா, தானாக முன்வந்து அணைகளை திறந்து தண்ணீரை தந்துள்ளது. இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

ஒரு டிஎம்சி தண்ணீரை தினந்தோறும் தமிழகத்துக்கு தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், உடன்படாத கர்நாடக அரசு இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டு உள்ளது. ஒரு டிஎம்சி தண்ணீர் தர மறுத்த போது, ஒரு லட்சம் கண அடி தண்ணீர் திறந்து விடக் கூடிய சூழலை உருவாக்கி, இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது. இதை பார்க்கும் பொழுது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி நிரூபிக்கப்பட்டுள்ளது.



இன்றைய திமுக அரசு காவிரி விவகாரத்தில் ஜூலை 16 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியும், இந்திய பிரதமரை நேரடியாக சென்று சந்தித்து காவிரி விவகாரம் குறித்து முறையிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியும், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வலியுறுத்த முடியாமலும், உச்ச நீதிமன்றம் சென்றும் காவிரி விவகாரத்தில் எதையும் சாதிக்க முடியத நிலையில், இனிமேலாவது நீண்ட தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து இயற்கை அன்னை நமக்கு கொடையாக வழங்கி வரும் தண்ணீரை சேமித்து யாருடைய தயவையும் எதிர்பாராமல் தொலைநோக்கு பார்வையோடு நமக்கு கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க, தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை சேமிப்பது, விவசாயத்திற்கும், தொழில்களுக்கும், குடி தண்ணீகுக்கும் யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாட்டை இந்த அரசு கொண்டு வர வேண்டும்.

நாங்கள் (திமுக) டெல்டா காரங்க தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்டா பகுதி விவசாயிகளை மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.