அம்பாசமுத்திரம் அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், கால் தவறி தண்டவாளத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு தினமும் மாலை 6:15 மணிக்கு பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக நெல்லை சென்றடையும் இந்த ரயில் இரவு 7 மணி அளவில் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று வழக்கம்போல், இரவு 7 மணி அளவில் ரயில் அம்பாசமுத்திரத்தில் இருந்து புறப்பட தயாரானது.
இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவிலை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 24) எனும் இளைஞர், நெல்லை செல்வதற்காக ஓடும் ரயிலில் ஏற முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியில், கால்தவறி தண்டவாள பாதையில் ரயில் பெட்டிகளுக்கு இடையே விழுந்த சிவசுப்பிரமணியனுக்கு பலத்த அடிப்பட்டது. இதைப்பார்த்த பயணிகள் பயந்து கூச்சல் போடவே, ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார், ரெயில்பெட்டிகளுக்கு இடையே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவசுப்பிரமணியனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில், சிவசுப்பிரமணியனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, தென்காசி ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர். ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர் கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து அடிபட்டு உயிரிழந்த சம்பவம், அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.