ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவாரில் இருந்து சின்தான் மலை உச்சி வழியாக மார்வா நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், தக்சம் என்ற இடத்தில் இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில் போலீஸ் காவலர் ஒருவர், 2 பெண்கள் மற்றும் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் என மொத்தம் 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்த ஒரு கார், தக்சம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. காரில் பயணம் செய்த 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மற்றும் ரியாசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் இரு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்த நிலையில், இத்துயர விபத்து நிகழ்ந்துள்ளது.
முன்னதாக ஜூலை 13-ம் தேதி, தோடா மாவட்டத்தில் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி, 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் இருவர் உயிரிழந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர்.