புதுடெல்லி: இந்திய பழங்குடி மொழிகளை கற்க உதவும் 25 அடிப்படை நூல்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் வெளியிட உள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘யாழ் டிவி’ எனும் கல்வித் தொலைக்காட்சி நாளை தொடங்கப்பட உள்ளது. டெல்லி மானெக்ஷா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இதில் கலந்து கொள்கிறார். இதே நிகழ்ச்சியில் இந்திய பழங்குடி மொழிகளை கற்க உதவும் அடிப்படை நூல்களையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இந்த நூல்களை, இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் (சிஐஐஎல்), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) ஆகியவை பதிப்பித்துள்ளன. இந்திய பழங்குடி மொழிகளின் அடிப்படை எழுத்துகளை கற்பிக்கும் வகையில் இந்நூல்கள் அமைந்துள்ளன.
சுமார் 100 பக்கங்கள் கொண்டஇந்நூல்களில் வட திராவிட மொழியான கொலாமி தெலுங்கு மற்றும் கோண்டி ஒடியா ஆகியவற்றுடன் வடகிழக்கு மாநிலப் பழங்குடிகளின் மொழிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நூல்கள் நாடு முழுவதிலும் அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளன. பொதுமக்களும் படிக்கும் வகையில் இவை என்சிஇஆர்டி இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்ற 22 மொழிகள் மட்டுமே மத்திய அரசால் வளர்ச்சி பெற்று வந்தன. தற்போது அப்பட்டியலில் இடம்பெறாத பழங்குடி, மலைவாழ் மக்களின் மொழிகளும் மத்திய கல்வித் துறையால் கவனம் பெற்று, வளர்ச்சி பெற்று வருகின்றன. இதையொட்டி நாளை வெளியாகும் நூல்கள், ஒளி-ஒலி பதிவுகளாகவும் விரைவில் வெளியாக உள்ளன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் சுமார் 254 மொழிகள் இருப்பதாகப் பதிவானது. இவற்றில் 121 மொழிகள், குறிப்பிட்ட சமூகத் தினரின் தாய்மொழியாகவும் இருப்பது தெரியவந்தது.
மேலும் தாய்மொழியாக இருக்கும் பட்சத்தில் 10 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் அம்மொழியை பேசி வருவதாகவும் மதிப்பிடப்பட்டது. இந்த 121 மொழிகளையும் அரசு தொடக்கப் பள்ளிகளில் கற்றுக் கொடுப்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இந்த வகையில்தான் தற்போது பழங்குடி, மலைவாழ் மக்களின் 25 மொழிகளின் அடிப்படை நூல்களை பிரதமர் வெளியிடுகிறார்” என்று தெரிவித்தனர்.
தமிழை வளர்க்க யாழ் சேனல்: மக்களவை தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்திய மொழிகள் வளர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதை அமல்படுத்தும் வகையில் முதல் மொழியாக தமிழை வளர்க்கவும், திருக்குறள் புகழை பரப்பவும் யாழ் சேனல் தொடங்கப்படுகிறது. பாஜக தேர்தல் அறிக்கையின்படி திருவள்ளுவர் பண்பாட்டு மையங்களை உலக நாடுகளில் அமைப்பதிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.