புதுச்சேரி: பிரதமர் மோடிக்கு நெருக்கமாக, குஜராத்தில் முதல்வர் அலுவலகத்திலேயே 18 ஆண்டுகள் பணியில் இருந்து ஜூனில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பின்னணி என்ன?
புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கடந்த 2021ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமிழிசை தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்ததால் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்புகளை கூடுதலாக ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த மார்ச் 23ல் ஏற்றார்.
இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரிக்கு என்று தனி துணைநிலை ஆளுநர் இல்லை. பொறுப்பு ஆளுநர்களே புதுவையை நிர்வகித்து வந்தனர். இதனால் புதுவைக்கு என தனியாக ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதுச்சேரியில் புதிய துணைநிலை ஆளுநராக அண்மையில் குஜராத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மூ பிறப்பித்துள்ளார்.
புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 1953ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி பிறந்தவர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்த இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி வேதியியலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்ஏ பொருளாதாரமும் பயின்றவர். இவரது தந்தை அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் ஊட்டியில் பணிபுரிந்தவர் என்பதால் ஊட்டியில் வளர்ந்தார். 1979ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான கைலாசநாதன் குஜராத்தில் 1981ம் ஆண்டில் உதவி ஆட்சியராக பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றிய இவர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக இருந்த போது 2013 – 2014ம் ஆண்டில் குஜராத் மாநில முதன்மை தலைமை செயலாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்றார். ஓய்வுக்கு பின்னும் கடந்த ஜுன் மாதம் வரை கைலாசநாதன் முதன்மை செலாளராக தொடர்ந்து குஜராத்தில் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஒரே மாதத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 45 ஆண்டுகாலம் குஜராத்தில் முக்கியப்பொறுப்புகளை வகித்து மோடிக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார்.
இதுபற்றி குஜராத் வட்டாரங்களில் கூறுகையில், “முதல்வராக மோடி இருந்தபோது அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் கைலாசநாதன். பிரதமராக மோடி ஆனபிறகு குஜராத்தில் பொறுப்புகளைத் தொடர்ந்து வகித்தார். குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக சுரேந்திராநகர் மாவட்டத்தில் ஆட்சியராக முதலில் பதவியேற்ற கைலாசநாதன், அதைத்தொடர்ந்து சூரத் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அகமதாபாத் நகராட்சி ஆணையராக இருந்தபோது, குடிநீர் நெருக்கடியைத் தீர்க்க 43 கிலோமீட்டர் நீளத்துக்கு பைப்லைன் அமைத்தது உட்பட – நகருக்கு அவசரகால நீர் விநியோகத்திற்கான ரஸ்கா திட்டத்தை உருவாக்கினார்.
கடந்த 2006ல் குஜராத் முதல்வர் அலுவலகத்துக்குள் வந்தார். 2013ல் முதல்வரின் முதன்மை செயலர் பதவியை கைலாசநாதன் ஏற்றார். மோடியின் பல கனவுத்திட்டங்களை நிறைவேற்றினார். கடந்த ஜூன் வரை தொடர்ந்து 18 ஆண்டுகள் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மோடி பிரதமரான பிறகு குஜராத்தில் ஆனந்தி பென் படேல், விஜய் ரூபானி, பூபேந்திர படேல் ஆகியோர் முதல்வராக வந்தபோதும் இவர் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தில் முக்கியப்பொறுப்பினை வகித்து வந்தார்.
தற்போது முதல்வர் அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்றாலும், சர்தார் சரோவர் நர்மதா நிகம் லிமிடெட்டின் தலைவராகவும், காந்தி ஆசிரம மறுமேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் தொடர்கிறார். ஆளுநர் பதவி அவருக்கு கிடைக்கும் என குஜராத்தில் பேச்சு எழுந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ” என தெரிவித்தனர்.
எப்போது பதவியேற்பு? – புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்ட தொடர் வருகிற 31ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநராக யார் உரையாற்றுவார் என்று அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்களால் உறுதியாக தெரிவிக்க இயலவில்லை. ஆகஸ்ட் முதல் வாரத்தில்தான் கைலாசநாதன் புதுச்சேரி வரவாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஆளுநர் வருகை தொடர்பாக ராஜ்நிவாஸுக்கு தகவல் ஏதும் இதுவரை வரவில்லை.