புதுச்சேரி: புதுச்சேரி சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனையிட்டதற்கு சாராயக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று கூட்டம் நடத்தினர். பொய் வழக்கு போடுவதாக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளனர்.
கள்ளக்குறிச்சி எரிசாராயம் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக போலீஸார் புதுச்சேரி எல்லை பகுதிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தில் தமிழக போலீஸார் நடத்திய வாகன சோதனையில், சாராய பாக்கெட்டுகள் கொண்டு சென்ற நபர் பிடிபட்டார்.
அதன் அடிப்படையில் தமிழக போலீஸார் தமிழக எல்லையிலுள்ள புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் சோதனை நடத்தி, அங்கிருந்த 40 பாக்கெட் சாராயம், பாக்கெட் போடும் மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சாராய விற்பனையாளர் பிரம்மநாதனையும் கைது செய்தனர்.
புதுச்சேரி போலீஸார் அனுமதி இல்லாமல் சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனை நடத்தியது தொடர்பாக சாராயக்கடை உரிமையாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு அவர்கள் கூறியதாவது: தமிழக காவல்துறை புதுச்சேரி சாராயக்கடைகளில் சோதனை செய்து பொய் வழக்கை பதிவு செய்து தொழில் நடத்த விடாமல் செய்கிறார்கள். தொழில் நடத்த முடியாத சூழலை முதல்வரிடம் தெரிவிக்கவுள்ளோம். இதனால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் வராது, கிஸ்தி கட்டமுடியாது.
புதுச்சேரியில் நாலரை லிட்டர் வரை சாராயம் தரலாம். தற்போது சில பாக்கெட்டுகளை வைத்து உரிமையாளர்கள் மீது தமிழக போலீஸார் வழக்குபதிந்துள்ளனர். டாஸ்மாக் தமிழகத்துக்கு முக்கியம். அதேபோல்தான் சாராயக்கடை, மதுக்கடைகள் புதுச்சேரிக்கு முக்கியம். தமிழக போலீஸாரால் எங்களுக்கு நெருக்கடியான சூழல் ஏற்படுகிறது.
புதுச்சேரி போலீஸ் இல்லாமல் தமிழக போலீஸார் நேரடியாக நடவடிக்கை எடுப்பது சட்ட விரோதம். புதுச்சேரியில் கள்ளச்சாராயம் இல்லை. தமிழகத்தில் விற்கிறார்கள். அங்கு அதை தடுக்க வேண்டியது தமிழக போலீஸ் கடமை. அதை விடுத்து புதுச்சேரி அரசு உரிமம் உள்ள கடையில் நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல. இதற்காக முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளோம்
இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்காவிட்டால் கடையை நடத்த முடியாத சூழல் உள்ளது. தமிழக போலீஸரால் பாதிப்பு உள்ளதாக திங்கள்கிழமை முதல்வரிடம் மனு அளிக்கிறோம் என்றனர்.