ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தின் ஆத்மகூர் பேருந்து நிலையத்திலிருந்து, அரசுப் பேருந்து திருடப்பட்டதாக காவல்துறையிடம் பேருந்து நிலைய நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது. அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ஒருவர் பேருந்தில் ஏறி பேருந்தை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தப் பேருந்து முச்சுமாரி கிராமத்துக்கு அருகில் பேருந்து காவல்துறை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
மேலும், பஸ்ஸை எடுத்துச் சென்ற துர்க்கையாவை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, “வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துர்க்கையா. லாரி டிரைவரான இவர், சரக்குகளுடன் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல நாள்கள் கழித்து வரும் வழக்கமுடையவர். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல லாரியைவிட்டு, வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். ஆனால், வீட்டில் அவர் மனைவி இல்லை.
விசாரித்ததில், அவர் தன் தாயார் வீடு இருக்கும் முச்சுமரிக்குச் சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த கிராமத்துக்குச் செல்ல வாகன வசதி இல்லை என்பதால், ஆத்மகூர் பேருந்து நிலையத்தில், சாவியுடன் இருந்த பேருந்தை எடுத்துக்கொண்டு துர்க்கையா தன் மனைவி இருக்கும் கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் அவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்தோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மாமியார் வீட்டுக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தை திருடி, ஓட்டிச் சென்ற நபர் குறித்து இணையவாசிகள் பலரும் கமென்ட்களைத் தெரிவித்து வருகின்றனர்!