ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை: எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை தகவல்

புதுடெல்லி: ‘‘ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பயிற்சியில் ‘எதிரி’ விமானங்களை துல்லியமாக தாக்கின’’ என விமானப்படை கூறியுள்ளது.

ரஷ்யாவிடம் எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. இது எதிரி நாட்டு போர் விமானங்களை நடுவானிலே சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை. இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காக 5 எஸ்-400 படைப்பிரிவுகளை ரூ.35,000 கோடிக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 எஸ்-400 படைப்பிரிவுகளை ரஷ்யா இதுவரை விநியோகம் செய்துள்ளது. மீதமுள்ள 2 எஸ்-400 படைப்பிரிவு 2026-ம் ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விரைந்து விநியோகம் செய்ய இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிடம் வாங்கப்பட்ட எஸ்-400 ஏவுகணைகளுக்கு, சுதர்ஸன் ஏவுகணைகள் என பெயரிடப்பட்டு விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்ஸன சக்கரம் எதிரிகளை வீழ்த்தும் திறன் வாய்ந்தது.அதனால் எஸ்-400 ஏவுகணைகளுக்கு சுதர்ஸன் ஏவுகணைகள் என பெயரிடப்பட்டுள்ளன.



விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள எஸ்-400 ஏவுகணைகளின் வலிமையை பயிற்சியில் சோதித்து பார்க்க விமானப்படை முடிவு செய்தது. இதற்காக உண்மையான போர் விமானங்களும் ‘எதிரி’ விமானங்களாக பயன்படுத்தப்பட்டன. இதில் எஸ்-400 ஏவுகணைகள் 80 சதவீத ‘எதிரி’ விமானங்களை சுட்டுவீழ்த்தின. மற்ற போர் விமானங்களை தாக்குதலை கைவிட்டு திரும்பி செல்ல வைத்தன. எஸ்-400 ஏவுகணையின் செயல்பாடு, விமானப்படைக்கு முழு திருப் தியை அளித்துள்ளது.

சீனா தனது எல்லையில் வான் பாதுகாப்பை மிகப் பெரியளவில் பலப்படுத்தி வருகிறது. இதற்கு போட்டியாக இந்தியாவும், மிகப் பெரிய அளவில் வான் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்திய விமானப்படையில் சமீபத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எம்ஆர்-எஸ்ஏஎம் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள், இஸ்ரேல் தயாரிப்பு ஸ்பைடர் ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.