கடலூர்: காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் என்று 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்திகுமார் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது மேட்டூரில் 109அடி தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் இன்று(ஜூலை.27) விவசாய பாசனத்துக்காகவும், குடிநீருக்காவும், ஆடி பெருக்கை முன்னிட்டும் மேட்டூர் ஆணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வெள்ளபெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் இன்று மதியம் சிதம்பரம் வட்டம் பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி அக்கறை ஜெயங்கொண்ட பட்டணம் ஆகிய கிராம பகுதிகளுக்கு சென்று கொள்ளிட ஆற்றில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் வெள்ள உபரி நீரினால் ஏற்படும் வெள்ள பாதிப்பு மற்றும் வெள்ள தடுப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி அக்கறை ஜெயங்கொண்ட பட்டணம் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ள பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அக்கறை ஜெயங்கொண்டப்பட்டடினத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக கருங்கற்கலால் போடப்பட்ட வெள்ள தடுப்பு சுவரை பார்வையிட்டார். சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஷ்மிராணி, அணைக்கரை நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சி நாதன், வல்லம் படுகை பிரிவு உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.