பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றிருக்கிறார் மனு பாக்கர். 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வெண்கலம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்லும் முதல் வீராங்கனை எனும் பெருமையை மனு பாக்கர் பெற்றிருக்கிறார்.
பதக்கத்தை வென்ற பிறகு ஆனந்த கண்ணீரோடு பேசிய மனு பாக்கர், “வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறேன். என்னுடைய சக்தி முழுவதையும் செலுத்தி இதற்காக கடுமையாகப் போராடியிருக்கிறேன். இந்த முறை வெண்கலம் வென்றிருக்கிறேன். அடுத்த முறை இன்னும் பெரிதாக வெல்ல முயல்வேன். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தோல்விக்குப் பிறகு நான் கூடுதலாக ஆன்மிகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டேன்.
நான் ஒரு அடிப்படைவாதி கிடையாது. ஆனாலும் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்புகிறேன். பகவத் கீதையை அதிகமாக வாசிப்பேன். `உனக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ, அதை செய். மற்றவற்றை பற்றி யோசிக்காதே’ என்பதுதான் என்னுடைய பாணி.
கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனருக்கு `நீ உன்னுடைய காரியங்களில் மட்டும் கவனமாக இரு. முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாதே’ எனக் கூறியிருப்பார். போட்டியின் முக்கியமான தருணங்களின்போது அதுதான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸூக்குப் பிறகு நான் கடும் அதிருப்தியில் இருந்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு நிறைய காலம் பிடித்தது. ஒரு கட்டத்தில் நடந்தவையெல்லாம் நடந்தவையாகவே இருக்கட்டும். இனி வருங்காலத்தை கவனிப்போம் என முடிவெடுத்தேன். இந்தப் பதக்கம் ஒரு அணியாக கூட்டு உழைப்பின் மூலம் கிடைத்தது. பதக்கம் வெல்ல ஒரு காரணியாக இருந்ததில் மகிழ்ச்சி” என்றார் நெகிழ்ச்சியாக.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஏர் பிஸ்டல் போட்டியில் ஆடிய போது மனு பாக்கரின் துப்பாக்கி பழுதாகி அதன் மூலம் நேர விரயம் ஏற்பட்டு தோல்வியடைந்திருந்தார். அந்த வேதனையிலிருந்து மீண்டு வந்து இப்போது வென்றிருக்கிறார். அதனால்தான் ரொம்பவே உணர்ச்சிவசமாகப் பேசியிருக்கிறார்.