பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதலில் வெறும் சில இன்ச்சுகள் வித்தியாசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்திருந்தது. 43 வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், ரமிதா ஜிந்தால் ஆகியோர் இந்தியா சார்பில் கலந்துகொண்டனர். இந்தச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் நிலை. ரமிதா 5-ம் இடம்பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டார்.
இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகளோடு 10-ம் இடமே பிடித்திருந்தார். எட்டாவது இடத்தைப் பிடித்து கடைசியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் வீராங்கனை 631.3 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தார். 0.7 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் இறுதிப்போட்டி வாய்ப்பைத் தவறவிட்டார்.
ஒவ்வொரு வீராங்கனைக்கும் 60 முறை இலக்கை நோக்கி சுடும் வாய்ப்பு வழங்கப்படும். இதில் 58 முறை இளவேனில் சரியாக இலக்கை துளைத்து 10 புள்ளிகளுக்கும் மேல் பெற்றிருந்தார். இரண்டே இரண்டு முறைகளில் மட்டுமே கொஞ்சம் தவறிப்போய் 9.9, 9.8 புள்ளிகளை எடுத்தார். இவற்றையும் இன்னும் துல்லியமாக அடித்து 10 புள்ளிகளுக்கு மேல் சென்றிருந்தால் இளவேனில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கக்கூடும். சில இன்ச்சுகள் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக இளவேனில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்துவிட்டார்.
அதேநேரத்தில் இன்னொரு வீராங்கனை ரமிதா 631.5 புள்ளிகளைப் பெற்று 5-ம் இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டார். துப்பாக்கிச் சுடுதலில் கடந்த 20 வருடங்களாக எந்த இந்திய வீராங்கனையும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றதே இல்லை எனும் சூழலில் நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இதுவரை மனு பாக்கர், ரமிதா என இருவர் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றுவிட்டனர். இறுதிப்போட்டியிலும் இவர்கள் வரலாறு படைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.