சென்னை: “அதிமுக ஆட்சியின் சாதனைகளை கட்சி நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.” என்று நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2-ம் கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, “நாங்கள் தேர்தலில் கடுமையாகத்தான் உழைத்தோம். ஆனால், திமுகவின் பணநாயகம் வென்றுவிட்டது. அதனால் அதிமுக கூட்டணி வேட்பாளர் தோல்வியைச் சந்தித்தார்.” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பேசிய பழனிசாமி, “மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு தான் செயல்படுத்தியது. அதிமுக அரசின் சாதனைகளை நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கத் தவறிவிட்டனர்.
அதனால்தான் நாம் இந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். எனவே, நிர்வாகிகள் அனைவரும் மாதந்தோறும் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாம் ஆட்சியை பிடிக்க முடியும்.” என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.