புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஏழை தொழிலாளிக்கு, காலணிகள் தயாரிக்கும் இயந்திரத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வழங்கினார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த காலணி தயாரிக்கும் ஏழை தொழிலாளி ராம் சைத். இவர் சுல்தான்பூரில் வசிக்கிறார். தனது ஏழ்மை நிலையை கூறி உதவி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தகவல் அளித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சை கருத்து கூறியது தொடர்பான அவதூறு வழக்கில், கடந்த26-ம் தேதி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.
நீதிமன்றம் செல்லும் வழியில் சுல்தான்பூரில், ஏழை தொழிலாளி ராம் சைத் வீட்டருகே காரை நிறுத்தினார். பின்னர் ராம் சைத் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து 30 நிமிடங்கள் உரையாடினார். அவருடைய நிலையை கேட்டறிந்த ராகுல், நிச்சயம் உதவி செய்வதாக கூறி நீதிமன்றத்துக்கு சென்றார்.
காங்கிரஸ் உறுதி: இந்நிலையில், ராம் சைத்துக்கு காலணி தயாரிக்கும் இயந்திரத்தை (தையல் இயந்திரம்) ராகுல் காந்திஅனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘‘இதுபோன்று கடினமாக உழைக்கும் ஏழை தொழிலாளிகளின் உரிமைகளுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். அவர்களுடைய குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வோம். ராம் சைத் போன்ற ஏழை தொழிலாளிகளின் எதிர்காலம் பிரகாசமாக அமையவும், அவர்களுடைய பாதுகாப்பும்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏழை தொழிலாளி ராம் சைத் கூறும்போது, ‘‘வழக்கமாக தினமும் ஒன்று அல்லது 2 ஷூக்கள் தைப்பேன். தற்போது ராகுல் காந்தி எனக்கு தையல் இயந்திரம் கொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிமேல் தினமும் 8 முதல் 10 ஷூக்கள் தைக்க முடியும். அத்துடன் ஸ்கூல் பேக், பர்ஸ் உட்பட பல பொருட்களை தைக்க முடியும். என்னுடைய வறுமையை பார்த்து என்னை சந்தித்த 2-வது நாளே ராகுல் காந்தி உதவி செய்துள்ளார். அவருக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.