ஐபிஎல்லில் வர இருக்கும் அதிரடி மாற்றங்கள்! இந்த விதிகள் புதிதாக அறிமுகம்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடர்பான சந்திப்பு வரும் ஜூலை 31 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்திய கிரிக்கெட் அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல வீரர்களை ஐபிஎல் அணிகள் வெளியிட உள்ளதாகவும், மேலும் வீரர்களை மாற்றி கொள்ளவும் தயாராக உள்ளன. இது தவிர கேப்டன்சி மாற்றங்கள், பயிற்சியாளர் மாற்றங்களும் நடைபெற உள்ளது. இதனால் ஏற்கனவே இந்த ஐபிஎல் ஏலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஜூலை 31 ஆம் தேதி சந்தித்து பேச உள்ளனர். இதில் மெகா ஏலம் தொடர்பான அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்பட உள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் டிசம்பர் 2024 அல்லது பிப்ரவரி 2025ல் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

 

கடைசியாக மெகா ஏலம் 2022ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பல அணிகளில் இருந்த முக்கிய வீரர்கள் வேறு சில அணிகளுக்கு மாற்றப்பட்டனர். அதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிகளுக்கு செல்ல உள்ளனர் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 2022 ஏலத்தில் தான் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக இணைந்தன. மெகா ஏலம் தொடர்பாக பல விதிகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒருசில அணிகள் 7 முதல் 8 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்று கேட்பதாகவும், ஒருசில அணிகள் பழைய முறைபடி செல்லலாம் என்றும் பிசிசியிடம் வேண்டுகோள் வைக்கின்றனர். எனவே, இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தக்கவைப்பு கொள்கை

தற்போது இருக்கும் விதிகளின்படி ஒவ்வொரு அணியும் 3 இந்திய வீரர்களையும், 2 வெளிநாட்டு வீரர்களையும் தக்க வைத்து கொள்ளலாம். இந்த எண்ணிக்கையை 8 வீரர்களாக மாற்ற சில அணிகள் கோரிக்கை வைக்கின்றன. மேலும், 2018ம் ஆண்டு இருந்ததை போல ரைட் டு மேட்ச் (RTM) அம்சம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்டிஎம் என்பது ஐபிஎல்லில் உள்ள ஒரு விதியாகும். ஒவ்வொரு அணிக்கு ஒன்று அல்லது இரண்டு ஆர்டிஎம் கார்டுகள் கொடுக்கப்படும். ஏலத்தில் இரண்டு அணிகள் ஒரு வீரரை எடுக்க போட்டி போடும் போது அந்த சமயத்தில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அந்த வீரரை தங்கள் அணியில் எடுத்து கொள்ள முடியும். 2018க்குப் பிறகு இந்த ஆர்டிஎம் கார்டை ஐபிஎல் ஏலத்தில் பயன்படுத்தவில்லை. 

தற்போது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல்லில் மெகா ஏலம் நடைபெறுகிறது. இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று ஐபிஎல் உரிமையாளர்கள் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இம்பாக்ட் விதியை வைத்திருக்கலாமா, வேண்டாமா என்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ரோஹித் சர்மா, தோனி, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இதற்கு ஆதரவாக இல்லை. ஆரம்பத்தில் இருந்தே இம்பாக்ட் விதியை வேண்டாம் என்று சொல்லி வருகின்றனர். அதே போல ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் அந்த சீசனில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.