மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு டி20 ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள பாண்ட்யா ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் பிட்டாக இல்லாத காரணத்தால் பாண்ட்யா ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள் முழுமையாக வீசுவதில்லை என்றும், எனவே அவர் பிட்டாகி 10 ஓவர்கள் முழுமையாக வீசினால் தேர்வுக்குழு அவரை ஒருநாள் அணியில் தேர்ந்தெடுக்கும் என்றும் இந்திய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாண்ட்யா தொடர்ந்து விளையாடுவது மிகவும் முக்கியம். மேட்ச் பிட்னஸ் மிகவும் முக்கியம் என்று நான் நம்புவேன். எனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் முடிந்தளவுக்கு தொடர்ந்து விளையாட வேண்டும். நாம் வலுவாக பிட்டாக இருக்கிறோம் என்று நினைத்தால் பாண்ட்யா ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பலாம்.
ஆனால் அதற்கு பவுலிங் முக்கியமாகும். 10 ஓவர்கள் வீச வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் மூன்று ஓவர்கள் மட்டும் வீசினால் அது அணியின் சமநிலையை பாதிக்கும். பாண்ட்யா ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற 8 – 10 ஓவர்கள் வீசி தம்முடைய வழியில் பேட்டிங் செய்ய வேண்டும். எனவே இவை அனைத்தும் ஹர்திக் பாண்ட்யாவின் பயணத்தில் உள்ளது.
ஏனெனில் அவருக்குத்தான் மற்றவர்களை விட தம்முடைய உடலைப் பற்றி நன்றாக தெரியும். மேலும் இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றிய விதம் அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும். எனவே மீண்டும் பிட்டாகி மேலே வர அவருக்கு எந்த உத்வேகமும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.