பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து, அரசியல் படுகொலைகள் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று மட்டும், அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகள் தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அ.தி.மு.க வட்ட செயலாளரான பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது மகிழுந்தை மோதிச் சாய்த்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், இளையான்குடி சாலையில் செல்கும் போது மர்ம ஆட்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் உஷாராணியின் கணவர் ஜாக்சனை இருசக்கர ஊர்திகளில் வந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இந்த படுகொலைகள் காட்டுகின்றன.
படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி காவல்துறை அதன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான். அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறிவிட்டது.
கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒருபுறம் இருக்க போதைக் கலாசாரமும், அதனால் நிகழும் குற்றச்செயல்களும் தலைவிரித்து ஆடுகின்றன. சென்னை காசிமேடு பகுதியில், 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன், இன்னொரு சிறுவனை கொடூரமாக தாக்கும் காணொலி காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தடைசெய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள், 17 வயதான சிறுவனால் எளிதில் வாங்கும் அளவுக்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கொட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாயக் கடமை சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதுதான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவதற்கு இது தான் காரணமாகும். இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி , தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதை செய்ய முடியா விட்டால், தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88