ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த மனு பக்கர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் பாரிஸ் நகரத்தில் குழுமியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஒலிம்பிக்கின் போது தங்கள் பாலஸ்தீனத்தின் முதல் ஒலிம்பிக் வீரரான மஜீத் அபு மராஹுல் உயிரோடு இல்லாதது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று அவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து அந்நாட்டு மக்கள் இணையதளத்தில் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மஜீத் அபு மராஹுல் 1963-ல் நுசிராத் அகதிகள் முகாமில் பிறந்தவர். தொடர் ஓட்டப்பந்தய வீரர், கால்பந்து வீரர், பாதுகாப்பு அதிகாரி, தடகளப் பயிற்சியாளர் என பன்முகத்தன்மை கொண்ட இவர்தான் ஒலிம்பிக்கில் போட்டி பங்கேற்ற முதல் பாலஸ்தீனியர். அபு மராஹுல் வாழ்ந்த காசான்க் கடற்கரையானது நடப்பதற்கே ஏற்றதுயில்லை. அதில் அவர் முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து, ஒலிம்பிக்கில் பங்கேற்று அரசியல் மற்றும் விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும், பாலஸ்தீனத்தின் பெயரினை வரலாற்றில் இருந்து யாராலும் மறுக்க முடியாதபடி நிலைநாட்டச் செய்தவர்.
1967-ல் இஸ்ரேலால் உரிமைகள் பறிக்கப்பட்டப்போது அபு மராஹுல் ஒலிம்பிக்கில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று, 21-வது இடத்தைப் பிடித்து முதன்முதலாக பாலஸ்தீன் கொடியினை உலகம் பார்க்க தோளில் சுமந்தார். அதன் பிறகு தடகளப் பயிற்சியாளராகத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கிவந்தார். எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் மற்ற பாலஸ்தீனிய விளையாட்டு வீரர்களுக்கு அவர் புகழ்பெற்ற பயிற்சியாளராக மாறியதால் அவரது வெற்றிகள் கொடிக்கட்டி பறந்தன.
இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கலவரத்தால் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவர் கடந்த மாதம் உயிரிழந்தார். ஏராளமான சாதனைகள் படைத்து பாலஸ்தீனத்திற்கு பெருமைச் சேர்ந்த மஜீத் அபு மராஹுல் இந்த ஒலிம்பிக்கில் இல்லாதது அந்நாட்டு மக்களை வருத்தமடைய செய்திருக்கிறது.
– பி .கோபிநாத்